பெங்களூரு: பெங்களூரு சிறையில் சொகுசு வசதியைப் பெற மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆருயிர்த் தோழி வி.கே.சசிகலா லஞ்சம் கொடுத்த வழக்கில் இரண்டு வாரங்களில் முழுமையான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய ஊழல் தடுப்புப் படைக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
அப்போது, சிறையில் சொகுசு வசதிகளைப் பெறுவதற்காக சிறைத்துறை அதிகாரிகளுக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக சசிகலா மீது கடந்த 2018ஆம் ஆண்டு கர்நாடக ஊழல் தடுப்பு காவல்துறை அதிகாரிகள் வழக்குப் பதிந்தனர்.
அதன்பிறகு, இவ்வழக்கு தொடர்பில் காவல்துறை அதிகாரிகள் அவ்வளவாக தீவிரம் காட்டி விசாரணையை நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், இவ்வழக்கில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யும்படி ஊழல் தடுப்புப் படை அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கீதா என்பவர் கர்நாடக நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
இந்த பொதுநல மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வாதிட்ட வழக்கறிஞர், குற்றப்பத்திரிகை உள்துறை அமைச்சரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் அதனால் இன்னும் இரு வாரங்கள் கால அவகாசம் வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி அமர்வு, வழக்கு விசாரணையை மேலும் இரண்டு வார காலத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
ஒருவேளை இரண்டு வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாவிட்டால், உள்துறை செயலாளர் நேரில் முன்னிலையாக வேண்டும் என்றும் அமர்வு கூறியுள்ளது.
ரூ.2 கோடி லஞ்ச வழக்கு விசாரணை மீண்டும் இப்போது சூடு பிடித்துள்ள நிலையில், குற்றச்சாட்டுக்கு ஆளான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சருக்கு கோப்புகள் அனுப்பப்பட்டு உள்ளன.
இன்னும் இரு வாரங்களில் அதிரடியான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் சசிகலாவுக்கு அடுத்த சிக்கல் தொடங்கிவிட்டதாகக் கூறப் படுகிறது. இதனால் அவரது தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுபோன்ற சட்டப் பிரச்சினைகளை எதிர்கொள்ள என்றோ சசிகலா தயாராகிவிட்டார் என்று கூறும் அவரது ஆதரவாளர்கள், விரைவில் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

