கோவை: கோவையில் 15 வயது சிறுமி கொல்லப்பட்டு, மூட்டைக் கட்டி வீசப்பட்ட நிலையில், ஒரு புதரில் இருந்து அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக சிறுமியின் குடும்ப நண்பர் முத்துக்குமார் என்பவர் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம், சரவணம்பட்டி அருகில் உள்ள யமுனா நகரில் வசித்த சிறுமியைக் கடந்த 11ஆம் தேதி முதல் காணவில்லை எனக் கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், "முத்துக்குமார் என்பவர் சிறுமியின் வீட்டின் அருகே வசித்து வந்துள்ளார். கட்டட மேற்பார்வையாளரான இவர், நன்கு பரிட்சயமான சிறுமியை நகைக்காகவே கொலை செய்ததாகக் கூறியுள்ளார். விசாரணை தொடர்கிறது," என்றனர்.
முன்னதாக சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது, சிறுமியின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டும் குற்றவாளிகளைக் கண்டறிந்து கைதுசெய்ய வேண்டும் என வலியுறுத்தியும் சிறுமியின் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

