சாத்தான்குளம்: சாத்தான்குளம் தந்தை-மகன் இரட்டைக் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, இதே காவல்நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராகப் பணியாற்றிய ரவிச்சந்திரன் சாட்சியம் அளித்துள்ளார்.
தந்தை-மகன் இருவரையும் காவல்நிலையத்தில் அடித்துத் துன்புறுத்தியதோடு, இருவரும் உயிரிழந்த பின்னர் ஆவணங்களைத் திருத்தி, அவர்கள் மீது பொய் வழக்கைப் பதிவு செய்ததாக ரவிச்சந்திரன் விசாரணையில் தெரிவித்தார்.
தந்தை-மகன் இருவரையும் துன்புறுத்தியதாக தலைமை காவலர் ரேவதியைத் தொடர்ந்து தற்போது சிறப்பு சார்பு ஆய்வாளரும் சாட்சியம் அளித்துள்ளது பெரும் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வியாபாரிகளான ஜெயராஜும் அவரது மகன் பென்னிக்ஸும் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டபோது, காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கு விசாரணை நேற்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி பத்மநாபன் முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், காவலர்கள் உட்பட ஒன்பது பேரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இம்மாதம் 21ஆம் தேதிக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

