முன்னாள் அமைச்சரைக் கைது செய்ய 4 தனிப்படைகள் அமைப்பு
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு முன்பிணை வழங்கமுடியாது என்று கூறி அவர்களது மனுக்களை உயர் நீதிமன்ற நீதிபதி நேற்று தள்ளுபடி செய்தார். இதையடுத்து, அவரைக் கைது செய்ய நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடி ரூபாயைப் பெற்று பணியும் வழங்காமல் பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்ததாக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட நால்வர் மீது வழக்குப்பதிவாகி இருந்தது.
கழிவறை இடிந்து மூன்று மாணவர்கள் பலி
திருநெல்வேலி: நெல்லையில் தனியார் பள்ளிக் கழிவறை கட்டடச் சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் நேற்று காலை உயிரிழந்தனர். பள்ளித் தலைமை ஆசிரியர் ஞானசெல்வி மீது காவல்துறையினர் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மூன்று மாணவர்கள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் 2,000 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
குரங்கிற்கு முதலுதவி செய்த கார் ஓட்டுநருக்கு முதல்வர் பாராட்டு
சென்னை: பெரம்பலூர் மாவட்டம், ஒதியம் சமத்துவபுரம் கிராமத்தில் நாய்கள் கடித்ததில் உயிருக்குப் போராடிய குரங்குக்கு தனது மூச்சைக் கொடுத்து காப்பாற்றிய கார் ஓட்டுநர் பிரபுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திற்கு வரவழைத்துப் பாராட்டினார்.
நான்குக்கும் மேற்பட்ட நாய்கள் கடித்ததில் அடிபட்டு உயிருக்குப் போராடிய குரங்கிற்கு முதலுதவி செய்த பிரபுவின் காெணாளிக் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியதை அடுத்து, பலதரப்பினரும் பிரபுவுக்கு பாராட்டுகளைத் தெரிவித்தனர். படம்: ஊடகம்
கேரளாவில் பறவைக் காய்ச்சல்; தமிழகத்தில் தடுப்புப் பணி தீவிரம்
நீலகிரி: கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் பறவைக் காய்ச்சலால் பலரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், நீலகிரி மாவட்டம், கூடலூரில் உள்ள தமிழக எல்லையில் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கக்கநல்லா சோதனைச் சாவடிக்கு வரும் வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பின்னரே அவை நீலகிரி மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படுவதாக தகவல்.

