சென்னை: பாகிஸ்தானுடன் கடந்த 1971ஆம் ஆண்டு நடந்த போரில் இந்தியா வெற்றிபெற, 93,000 பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவிடம் சரணடைந்தனர். இந்தப் போரின் விளைவாக வங்கதேசம் விடுதலை அடைந்தது.
இப்போரில் தாய் நாட்டிற்காக இன்னுயிர் நீத்த முப்படைகளின் வீரர்களை நினைவுகூரும் விதத்தில், ஆண்டுதோறும் டிசம்பர் 16ஆம் தேதி 'விஜய் திவாஸ்' எனும் வெற்றிதினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இவ்வாண்டு இந்த வெற்றியின் 50ஆம் ஆண்டு என்பதால் பொன்விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
உயிர் தியாகம் செய்த வீரர்கள் நினைவாக, சென்னை காமராஜர் சாலையில் கட்டப்பட்டுள்ள போர் வீரர்கள் நினைவுச் சின்னத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அத்துடன், தரை, கடல், ஆகாயம் ஆகிய முப்படைகளின் உயர் அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தினர்.
இந்தப் பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, போர் நினைவுச் சின்னத்தை பார்வையிட பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

