சென்னை: பிரதமர் மோடி அடுத்த மாதம் 12ஆம் தேதி தமிழகம் வருகிறார் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் புதிதாக தொடங்கும் 11 மருத்துவக் கல்லூரிகளை அவர் தொடங்கி வைக் கிறார்.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகள் 37 உள்ளன. இதில் 5,125 மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் உள்ளன.
மருத்துவக் கட்டமைப்பை விரிவு படுத்தவும், கூடுதலான மருத்துவ மாணவர்களைச் சேர்க்க வசதியாகவும் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நாடு முழுவதும் 75 புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதில் தமிழகத்திற்கு 11 மருத்துவக் கல்லூரிகள் ஒதுக்கப்பட்டன. மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களைத் தேர்வு செய்து அந்த மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க தமிழக அரசு முடிவு செய்தது.
அதன்படி திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் தலா ஒரு மருத்துவ கல்லூரி வீதம் 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன.
இந்த கல்லூரிகளின் திறப்புவிழா அடுத்த மாதம் 12ஆம் தேதி விருதுநகரில் நடைபெறுகிறது. பிரதமர் மோடி விழாவில் கலந்து கொண்டு புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கி வைக்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் அவர் மதுரை வந்து அங்கிருந்து காரில் அவர் விருதுநகர் செல்கிறார்.
இதில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்கிறார். பிரதமர் மோடியும் முதல்வர் ஸ்டாலினும் முதல் முறையாக ஒரே மேடையில் பங்கேற்கும் நிகழ்ச்சியாக இது இருக்கும்.

