சென்னை: தமிழக அரசு விழா மற்றும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட வேண்டும் என்றும் அந்தப் பாடல் மாநில அரசின் பாடலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று அண்மையில் தமிழக அரசு அறிவித்தது.
இந்த நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்து ள்ளார். இது தொடர்பாக அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
"தமிழ்த்தாய் வாழ்த்தினை அரசின் மாநில பாடலாக அங்கீகரித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அரசாணையை பா.ஜ.க. மிகவும் வரவேற்கிறது.
"மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை 1891ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்ட 'நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்' என்ற பாடலை 1970ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி தமிழ்த் தாய் வாழ்த்தாக அறிவித்து அரசாணை வெளியிட்டார்.
"அப்போதே அப்பாடலை முழுமையாகப் பயன்படுத்தாமல் அதில் சில வரிகளைத் தவிர்த்தது சர்ச்சையானது. மனோன்மணியம் சுந்தரனார் இருந்திருந்தால், தாம் எழுதிய இப்பாடலுக்கு கிடைத்த மாநில அரசின் அங்கீகாரத்தை நினைத்து பெரிதும் மகிழ்ந்திருப்பார். ஆனால் அப்பாடலை தமிழக அரசு முழுமை யாகப் பயன்படுத்தாமல் அதில் சில வரிகளை நீக்கி திருத்திப் பயன் படுத்துவதை அவர் கண்டிப்பாக ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்.
"ஆகவே தமிழக முதல்வர் தமிழ் மீது நல்லெண்ணம் கொண்டு செய்த முயற்சியை அரைகுறையாக செயல்படுத்தாமல், அவர் பதவி ஏற்கும்போது எடுத்துக்கொண்ட உறுதிமொழியின்படி, கடவுள் நம்பிக்கை வரிகளை சிதைக்காமல் முழுமையாக பாடலை பயன்படுத்து வதே கரந்தை தமிழ்ச் சங்கத்தின் தலைவர் உமா மகேசுவரனாருக்குப் பெருமை சேர்ப்பதாக அமையும். இதை தாங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் தராமல் செய்வீர்கள் என்று நம்புகிறேன்," என்று அண்ணாமலை தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பாஜக மகளிரணி தேசியத் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசனும் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய பாடலில் ஒரு பகுதியை மட்டுமே தமிழ்த்தாய் வாழ்த்தாக அன்றைய முதல்வர் மு.கருணாநிதி அறிவித்தார்.
'தமிழ்த் தெய்வ வணக்கம்' என்ற பாடலில் உள்ள குறிப்பிட்ட சில வரிகள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் இடம்பெறவில்லை. அவற்றில் கடவுள் பற்றிய வரிகள் வருவதாலேயே நீக்கப்பட்டுள்ளாகத் தெரிகிறது. மனோன்மணியம் சுந்தரனார் தமிழை தெய்வமாகத்தான் பார்க்கிறார்.
"எனவே, மாநிலப் பாடலாக அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின் முழுப்பாடலையும் பாட வேண்டும். முழுப்பாடலையும் மாநில பாடலாக அறிவிக்க வேண்டும்," என்று வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

