ஐதராபாத்: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்ப சத்திரத்தில் இம்மாதம் 8ஆம் தேதி நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தை ஒவ்வொரு கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம் என்று விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி தெரிவித்தார்.
"குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக முழுமையான விசாரணை முடிவடைவதற்கு முன்னர் எதையும் கூற விரும்பவில்லை.
"எப்படி தவறு நடந்தது என்பது குறித்து ஒவ்வொரு கோணத்திலும் விசாரணை நடத்தப்படுவது அவசியம். அதன் மூலம் பொருத்தமான காரணங்களைக் கண்டறிய வேண்டும்," என்றார் அவர். விபத்து தொடர்பாக நேர்மையான முறையில் விசாரணை நடக்கிறது என்றும் அவர் உறுதி அளித்தார்.
இந்த விபத்திற்குப் பிறகு விவிஐபிக்கள் பயணம் தொடர்பான விதிமுறைகள் மறு ஆய்வு செய்யப் படும். விசாரணை அறிக்கை அடிப்படையில் இந்த ஆய்வு இருக்கும் என்று திரு வி.ஆர். சவுத்ரி குறிப்பிட்டார்.
ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.
இந்த ஹெலிகாப்டர் விபத்து சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

