கம்பம்: கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் கடந்த 1 வாரத்துக்கு முன்பு பறவைக் காய்ச்சலால் கோழிகள், வாத்துகள் அதிக அளவில் இறந்தன.
இதையடுத்து நோய்த் தொற்று உள்ள கோழி, வாத்துகள் தமிழகத்துக்குள் வராமல் தடுக்க தேனி மாவட்ட எல்லையில் முகாம் அமைத்து கண்காணிக்குமாறு கால்நடைத்துறை இணை இயக்குநர் சுப்பையா பாண்டியன் உத்தரவிட்டார்.
அதன்படி தமிழக-கேரள எல்லைப்பகுதியான கம்பம் மெட்டு, குமுளி சோதனைச்சாவடியில் பறவைக் காய்ச்சல் தடுப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் இருந்து கோழிகள், வாத்து, முட்டை ஆகியவற்றைக் கொண்டு வரும் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் கேரளாவில் கால் நடைகள், கோழிகளை ஏற்றி இறக்கிவிட்டு திரும்பும் வாகனங்கள் முழுவதும் கிருமிநாசினி தெளித்த பிறகு தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றன.
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கோழி, முட்டை மற்றும் கால்நடைகள் செல்லும் வாகனங்கள் தடையின்றி இயக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் இதுவரை பறவைக் காய்ச்சல் அச்சம் இல்லை என்ற போதிலும் மறு உத்தரவு வரும் வரை இந்த நடைமுறை தொடரும் என்று அதிகாரிகள் கூறினர்.

