சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக தலைமறைவாகி உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவரது சகோதரி மகன்கள் வசந்தகுமார், ரமணன், கார் ஓட்டுநர் ராஜ்குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இம்மூவரிடமும் தீவிர விசா ரணை நடந்து வருகிறது.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து தலைமறைவான அவரைத் தேடும் பணியில் ஆறு தனிப்படை காவல் துறை அதிகாரிகள் களமிறங்கி உள்ளதாக விருதுநகர் எஸ்.பி. மனோகரன் தெரிவித்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் அரசுத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடியைப் பலரிடமும் பெற்று இப்போது வரை பணியும் வழங்காமல் பணத்தையும் திருப்பிக்கொடுக்காமல் மோசடி செய்துள்ளதாக ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் காவல்நிலையத்தில் இரு வழக்குகள் பதிவாகி இருந்தன.
இந்நிலையில், இந்த வழக்குகளில் இருந்து முன்பிணை கோரிய ராஜேந்திர பாலாஜியின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து அவர் தலைமறைவானார்.
இந்நிலையில், ராஜேந்திர பாலாஜி கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருக்கலாம் என்ற தகவலின் பேரில் ஒரு தனிப்படையினர் அங்கு விரைந்துள்ளனர்.

