திருநெல்வேலி: நெல்லையில் சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியின் கழிவறைச் சுவர் இடிந்து விழுந்து மூன்று மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பள்ளியின் தலைமை ஆசிரியை ஞானசெல்வி, பள்ளித் தாளாளர் செல்வகுமாா், கட்டட ஒப்பந்ததாரர் ஜான் கென்னடி ஆகிய மூவரையும் வரும் 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நெல்லை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், சாஃப்டர் பள்ளியில் விபத்து நடந்த இடத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
"கழிவறையின் முன்பக்க சுவரை அஸ்திவாரம் இல்லாமல் கட்டியதே சுவா் இடிந்ததற்கான காரணம்," என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர். மறு உத்தரவு வரும்வரை சாஃப்டர் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, விபத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உடற் கூராய்வு செய்யப்பட்ட மாணவர்களின் உடலை வாங்க மறுத்து அவர்களது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அவர்களுடன் நெல்லை ஆட்சியர் விஷ்ணு பேச்சுவார்த்தை நடத்தினார்.
உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் ராஜகண்ணப்பன், அரசு அறிவித்தபடி, இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சத்தையும் காயமடைந்த நான்கு மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சத்ைத யும் உதவி நிதியாக வழங்கினார்.
"மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கழிவறை, ஆய்வகம், நூலகங்களை ஆய்வு செய்வதற்கு பள்ளிக்கல்வித் துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது," என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
"பள்ளியில் பல ஆசிரியர்களிடம் கார் உள்ளது. அவர்களில் ஒருவர் தங்களது காரை கொடுத்து உதவியிருந்தால்கூட உயிருக்குப் போராடிய சுதீஷை காப்பாற்றி இருக்கலாம். ஆனால், யாரும் முன் வரவில்லை," என சாஃப்டர் பள்ளி மாணவர் ஒருவர் கூறியுள்ளார்.
மூன்று மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களை இடிப்பதற்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் சேதமடைந்த 200 பள்ளிக் கட்டடங்களை இடிக்க மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஏற்கெனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 325 பள்ளிக் கட்டடங்களில் ஆபத்தான நிலையில் உள்ள 100 பள்ளிக் கட்டடங்களை இடிக்க அம்மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார். இதேபோல், பெரம்பலூர் மாவட்டத்தில் 66 அரசுப் பள்ளிக் கட்டடங்கள் செயல்படுவதற்கு தகுதியற்றவை என்பதால் இடிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

