மீனவருக்கு அடித்தது அதிர்ஷ்டம்; 15 மீன்கள் ரூ.1 லட்சத்துக்கு விற்பனை
பாம்பன்: ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விசைப்படகு மீனவர்கள் கடலில் மீன்பிடித்துவிட்டு கரை திரும்பியபோது, பாறை, கட்டா, விலைமீன், நண்டு, திருக்கை, முண்டங்கண்ணி என பல வகையான மீன்களைப் பிடித்து வந்திருந்தனர். ஆனால், ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் மட்டும் அதிர்ஷ்டவசமாக சிக்கும் கூறல் மீன்கள் ஒரு மீனவரின் வலையில் மட்டும் சிக்கி இருந்தது. இந்த மீன் வெளிநாடுகளுக்கு மருத்துவப் பயன்பாட்டிற்காக ஏற்றுமதி செய்யப்படுகிறது. மற்ற மீன்களை விடவும் விலை மதிப்புமிக்க இம்மீனை 'லக்கி மீன்' என மீனவர்கள் அழைப்பர். இதனை ஏலத்தில் எடுக்க வியாபாரிகளிடையே போட்டி நிலவியது. ஒரு வியாபாரி 15 மீன்களையும் ரூ.1 லட்சத்திற்கு ஏலம் எடுத்தார்.
ஜனவரி 3ஆம் தேதி முதல் பொங்கல் தொகுப்பு விநியோகம்
சென்னை: ஜனவரி 3ஆம் தேதி முதல் நியாய விலைக் கடைகளில் பொங்கல் சிறப்புத் தொகுப்பு பொருள்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஒவ்வொருவருக்கும் ரூ.505 மதிப்புள்ள பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்கும்.
பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும் பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு உள்ளிட்ட 21 பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட உள்ளதாகத் ெதரிவிக்கப்பட்டுள்ளது.
வலிப்பு வந்தபோதும் பேருந்தை நிறுத்தி 31 பேரைக் காத்த ஓட்டுநர்
திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே அரசு விரைவுப் பேருந்தை ஓட்டி வந்துகொண்டிருந்த ஓட்டுநர் ஹேமநாதனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டபோதிலும், சாமர்த்தியமாக பேருந்தை ஓரங்கட்டி 31 பயணிகளின் உயிரைக் காப்பாற்றி உள்ளார். திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி பேருந்து வந்து கொண்டிருந்த போது, திருத்தணி பை-பாஸ் ரவுண்டானா அருகே ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் சாலையோரமாக நின்ற வாகனங்கள் மீது மோதியவாறே பேருந்தை ஒரங்கட்டி நிறுத்தினார். ஓட்டுநர் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கல்லூரி மாணவிகளிடம் பாலியல் சீண்டல்: பேராசிரியர் கைது
தாம்பரம்: தாம்பரம் அருகே உள்ள ஜல்லடையான் பேட்டையில் தனியார் கல்லூரி மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹோட்டல் மேலாண்மைத் துறையில் பேராசிரியராக உள்ள ஆபிரகாம் அலெக்ஸ், 48, மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவாகி உள்ளது.
நாட்டு மாடுகளுக்கு மட்டும் அனுமதி
சென்னை: ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் கலப்பின மாடுகளுக்கு அனுமதி வழங்கப்படாது என்றும் அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார். மதுரை மாவட்டம் வீரபாண்டியில் கால்நடை முகாமை துவக்கிவைத்துப் பேசிய அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

