அனைத்து நாடுகளில் இருந்தும் வரும் பயணிகளுக்குப் பரிசோதனை: தமிழகம் வலியுறுத்து
சென்னை: தமிழகத்தில் தொற்றுப் பாதிப்பு தொடர்ந்து இறங்குமுகமாக உள்ளது. தற்போது 22 மாவட்டங்களில் அன்றாடம் புதிதாக தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் பதிவாகி உள்ளது.
நேற்று முன்தினம் தமிழகத்தில் புதிதாக மேலும் 613 பேருக்கு கிருமி தொற்றியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்தது.
மேலும் ஒன்பது பேர் பலியானதை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 36,676ஆக கூடியுள்ளது. மாநிலத்தில் 7,407 பேர் தொற்றுப் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பல்வேறு மாவட்டங்களில் தொற்றுப் பரவல் நன்கு கட்டுக்குள் வந்துள்ளது. இதன் எதிரொலியாக 22 மாவட்டங்களில் அன்றாட தொற்று எண்ணிக்கை பத்துக்கும் கீழ் பதிவாகி வருகிறது.
நேற்று முன்தினம் ஆக அதிகமாக, சென்னையில் 125 பேரும் கோவையில் 101 பேரும் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இவை தவிர வேறு எந்த மாவட்டத்திலும் அன்றாடத் தொற்று எண்ணிக்கை நூறைக் கடக்கவில்லை என்று சுகாதாரத்துறை மேலும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ஓமிக்ரான் தொற்று இரண்டு மணி நேரத்துக்குள் மிக வேகமாகப் பரவும் தன்மை கொண்டது என்ற தகவல் வெளியானது.
இதையடுத்து, அனைத்து வெளிநாடுகளில் இருந்தும் தமிழகம் வரும் பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்ய அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் செல்வ விநாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் இதுவரை ஒருவருக்கு மட்டுமே ஓமிக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இதுவரை 28 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்புக்குரிய அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றும் அவர்களில் நால்வர் மட்டுமே ஓமிக்ரான் பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
மீதமுள்ள 24 பேர் குறைவான பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வந்தவர்கள் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அவர், இனி அனைத்து வெளிநாடுகளில் இருந்து வரும் எல்லாப் பயணிகளையும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த மத்திய சுகாதார அமைச்சு அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற 15ஆவது மெகா தடுப்பூசி முகாம் மூலம் 1.9 மில்லியன் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதற்காக 50,000 இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இத்தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொதுமக்கள் மனசாட்சிக்குப் பயந்தாவது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றார்.

