சென்னை: பாலியல் புகாரில் சிக்கிய மேலும் ஒரு போலி சாமியாரையும் அவருக்கு உடந்தையாக இருந்த மனைவியையும் சென்னை காவல்துறை கைது செய்துள்ளது.
சென்னை புறநகரில் உள்ள புழல் பகுதியைச் சேர்ந்த 48 வயதான சங்கர நாராயணன் என்ற அந்த ஆடவர், அதே பகுதியில் ஆசிரமம் நடத்தி வருகிறார். அவரது மனைவி புஷ்பலதா (43 வயது) ஆசிரமப் பணிகளைக் கவனித்து வந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு இளம்பெண் ஒருவர் தனது தாயாருடன் ஆசிரமத்துக்கு வந்து சென்றபோது அவருக்கும் சங்கர நாராயண னுக்கும் அறிமுகம் கிடைத்துள்ளது.
அதன் பிறகு ஒருமுறை ஆசிரமத்துக்குத் தனியாக வந்தபோது, குளிர்பானத்தில் மயக்க மருந்தைக் கலந்து கொடுத்து, அப்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி உள்ளார் சங்கர நாராயணன். இதற்கு அவரது மனைவியும் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு அந்தப் பெண்ணுக்குத் திருமணமானதும் கணவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதும் சங்கர நாராயணனுக்குத் தெரியவந்தது.
இதையடுத்து அந்தப் பெண்ணை மிரட்டி மீண்டும் ஆசிரமத்துக்கு வரவழைத்துள்ளார். தாம் சொல்வதைக் கேட்காவிட்டால் அந்தப் பெண்ணுடன் சம்பந்தப்பட்ட அந்தரங்கப் படங்களை இணையத்தில் வெளியிடப்போவதாக மிரட்டல் விடுக்கவே, அந்தப் பெண் வேறு வழியின்றி அவரது ஆசைக்கு இணங்கி உள்ளார்.
இந்நிலையில் அவர் கர்ப்பம் அடைந்து ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த நிலையிலும் சங்கர நாராயணன் அப்பெண்ணை விடுவதாக இல்லை. மீண்டும் பலமுறை தொலைபேசி வழி தொடர்புகொண்டு தம்மைப் பார்க்க வருமாறு அவர் மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது. இதனால் ஆவேசமடைந்த அந்தப் பெண், காவல்துறையின் மகளிர் பிரிவில் புகார் செய்ய, பெண் ஆய்வாளர் கண்ணகி வழக்குப்பதிவு செய்து, உடனடியாக சங்கர நாராயணனையும் அவரது மனைவியும் கைது செய்துள்ளார்.

