தொழில்நுட்ப நிறுவனங்களை ஈர்க்கும் மதுரை

தொழில்நுட்ப நிறுவனங்களை ஈர்க்கும் மதுரை

2 mins read
cb6b33cb-5e23-4196-9794-e75a754ab276
கடந்த ஓராண்டாக சென்னை, பெங்களூரில் இயங்கும் அதிகமான தொழில்நுட்ப நிறுவனங்கள் மதுரையில் அலுவலகங்களை நிறுவி வருகின்றன. படம்: இணையம் -

தமிழ்நாட்டின் தென்புற மாநகரான மதுரை, தொழில்நுட்ப நிறுவனங்களை ஈர்க்கத் தொடங்கியுள்ளது.

தொழில்முனைவோருக்கு ஆகும் செலவுக் குறைப்பே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

கடந்த ஓராண்டாக சென்னை, பெங்களூரில் இயங்கும் அதிகமான தொழில்நுட்ப நிறுவனங்கள் மதுரையில் அலுவலகங்களை நிறுவி வருகின்றன.

கோயம்புத்தூர் போன்ற நகரங்களைவிட மதுரையில் தொழில்நுட்பப் பூங்காவை செயல்படுத்துவதற்கான செலவு 20% குறைவு என்றும் வட்டார நிபுணர்கள் கூறியுள்ளனர்.

சென்னை மற்றும் பெங்களூரில் பணிபுரியும் மதுரையைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள் மதுரைக்கே மீண்டும் திரும்பி, சொந்த தொழில் தொடங்க ஆர்வம் காட்டுவதாகவும் 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' ஊடகம் தெரிவித்துள்ளது.

சென்னையைத் தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான 'கோஃபுரூகல்', மதுரையில் அலுவலகம் ஒன்றை அண்மையில் திறந்துவைத்தது. 15,000 சதுர அடி பரப்பிலான அந்த அலுவலகத்தில் 90 பேர் பணிபுரிகின்றனர். அத்துடன், மேலும் 60 பேரை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் குமார் வேம்பு தெரிவித்துள்ளார்.

மனிதவளத் தொழில்நுட்ப நிறுவனமான 'நீயாமோ', மதுரையில் எல்காட் தகவல் தொழில்நுட்ப மையத்தை அமைத்துள்ளது. அண்மையில் 65,000 சதுர அடி அலுவலகத்தைத் திறந்து, வரும் ஆண்டுக்குள் 1,200 ஊழியர்களைப் பணியமர்த்தவும் அது திட்டமிட்டுள்ளது.

"சென்னை அல்லது சிலிக்கான் பள்ளத்தாக்கில் இருப்பதைப் போலவே அதிநவீன தயாரிப்புகளை மதுரையிலும் உருவாக்குகிறோம். பணியாளர்கள் பெருநகரங்களுக்கு இடம்பெயர்வதைத் தடுக்கும் வகையில் அவர்களுக்கு போதிய அளவு சம்பளமும் கொடுக்கிறோம்," என்கிறார் நீயாமோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரங்கராஜன் சேஷாத்ரி.

"சென்னை, பெங்களூரு போன்ற பல்வேறு நகரங்களில் தொழில்நுப்பப் பூங்காவைத் தொடங்க நினைத்தேன். ஆனால், போக்குவரத்து நெரிசல் காரணமாக அதைக் கைவிட்டுவிட்ேடன். ஆனால், மதுரையில் எங்கு வேண்டுமானாலும் 10 நிமிடத்தில் பயணித்துவிடுவேன்,'' என்கிறார் தொழிலதிபர் கல்யாணசுந்தரம்.

ஹெச்சிஎல் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தற்சமயம் 5,400 ஆட்களைப் பணியமர்த்துகிறது. அதன் மதுரை மையம், கிளவுட் நேட்டிவ், நெட், ஃபுல் ஸ்டேக் மற்றும் பிற நவீன தொழில்நுட்பத் துறையினருடன் உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குகிறது.

எச்சிஎல் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணைத் தலைவர் ஸ்ரீமதி சிவசங்கர் கூறுகையில், "நகரில் உள்ள பொறியாளர்களையும் திறனாளர்களையும் தொடர்ந்து பணியமர்த்துவோம்," என்கிறார்.