வேலூர்: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன். மரச்செக்கு எண்ணெய் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.
இவரது மனைவி கோமதிக்கு கடந்த 13ஆம் தேதி குழந்தை பிறக்கும் என்று நாள் குறித்திருந்த நிலையில், நேற்று திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. தனது அக்காள் கீதாவுடன் யூடியூப் காணொளியைப் பார்த்து மனைவிக்குத் தானே பிரசவம் பார்த்துள்ளார் லோகநாதன்.
இந்நிலையில், தவறாகப் பார்க்கப்பட்ட பிரசவத்தால் கடும் போராட்டத்திற்குப் பிறகு கோமதிக்கு ஆண் குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது. இதையடுத்து கோமதிக்கு அதிக அளவு ரத்தப் போக்கு ஏற்பட்டு, மயங்கி உள்ளார்.
இதனால் பயந்து போன லோகநாதன் தனது அக்காவுடன் கோமதியையும் இறந்த குழந்தையையும் புன்னை அரசு சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளார். அங்கு கோமதிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாயின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. லோகநாதனிடம் நெமிலி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

