கடலூர்: கடலூர் மாவட்டத்தில் உள்கட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடந்துகொண்டிருந்த போது, அதிமுக நிர்வாகிகளுக்குள் மோதல் ஏற்பட்டதில் பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒரு அணியினர் மற்றொரு அணியினரின் கார் கண்ணாடியை அடித்து நொறுக்கினர்.
இதையடுத்து, அங்கு வந்த திருப்பாதிரிப்புலியூர் காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இருப்பினும், அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், அதிமுக கட்சி அலுவலகத்தின் முன்புறம் காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
கடலூரில் அதிமுக இரண்டாம் கட்ட அமைப்புத் தேர்தல் இன்றும் நாளையும் நடைபெற உள்ளது.
இந்நிலையில், உள்கட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம், கடலூர், பாதிரிக்குப்பத்தில் நடைபெற்றது.
அப்போது, மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலாளர் சேவல்குமார், கட்சி நிர்வாகிகளுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பப் படிவத்தை வழங்கியுள்ளார்.
இதையடுத்து, அங்கு வந்த நகர துணைச் செயலாளர் கந்தனுக்கும் சேவல்குமாருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையறிந்த கடலூர் வடக்கு மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் விரைந்து சென்று இருவரையும் சமாதானப்படுத்தினார். கூட்டம் முடிந்து சேவல்குமார் காரில் புறப்பட்ட போது, அவரது காரை கந்தன் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கினர். இதில் கார் கண்ணாடி உடைந்தது. இதையடுத்து இருதரப்பு ஆதர வாளர்களும் மோதிக்கொண்டதில் பலர் காயம் அடைந்தனர்.

