மதுரையில் முதல் எலும்பு வங்கி
மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மருத்துவ, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எலும்பு வங்கியை நேற்று துவக்கி வைத்தார். விபத்தில் காயம் அடைந்தவர்கள், எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள் உள்ளிட்டோரைக் குணப்படுத்த எலும்பு வங்கி தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தென் தமிழகத்தின் முதல் எலும்பு வங்கியாகும். தமிழகத்தில் எலும்பு புற்றுநோய், எலும்பு தேய்மானத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது, இதற்கு சென்னையில் மட்டுமே எலும்பு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தென் தமிழகத்தில் முதல்முறையாக மதுரையில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் எலும்பு வங்கி தொடங்கப்பட்டுள்ளது.
முதல்வர் காப்பீட்டுத் திட்டம்: வருமான வரம்பு ரூ.120,000 ஆக உயர்வு
சென்னை: முதலமைச்சர் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பயன்பெறுபவர்களின் வருமான வரம்பை தமிழக அரசு உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஆண்டு வருமான வரம்பை ரூ.72,000ல் இருந்து ரூ.120,000 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் வழி மாநிலத்தில் உள்ள அனைத்து ஏழை, எளிய மக்களுக்கும் நவீன, மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதி அரசு, தனியார் மருத்துவமனைகள் மூலம் கட்டணமின்றி கிடைக்கும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயனாளிகளுக்கான காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சமாக ஏற்கெனவே உயர்த்தப்பட்டுள்ளது.
முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
சென்னை: முன்னாள் அமைச்சர் தங்கமணி சம்பந்தப்பட்ட 16 இடங்களில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத் துறை காவலர்கள் நேற்று முன்தினம் நடத்திய சோதனையில், பலதரப்பட்ட வங்கிகளின் பாதுகாப்பு பெட்டகத்தின் சாவிகள், முக்கிய ஆவணங்கள், மடிக்கணினிகள், வன்பொருள்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிரசவம் பார்த்த கணவர் கைது
ராணிப்பேட்டை: புன்னை அரசு மருத்துவர் மோகன்குமார் நெமிலி காவல்நிலையத்தில் கொடுத்த புகாரை அடுத்து, தனது மனைவி கோமதிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த இயற்கை, மரபுவழி ஆர்வலரான லோகநாதனை நெமிலி காவல்துறையினர் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன். மரச்செக்கு எண்ணெய் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவர் தனது அக்காள் கீதாவுடன் சேர்ந்து யூடியூப் காணொளியைப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்துள்ளார்.
இந்நிலையில், தவறாகப் பார்க்கப்பட்ட பிரசவத்தால் கோமதிக்கு ஆண் குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது. இதையடுத்து புன்னை அரசு சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளார். அங்கு கோமதிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

