இலங்கை கைது செய்த தமிழக மீனவர்களை விடுவிக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்து
ராமேசுவரம்: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேசுவரம் மீனவர்கள் இரண்டாவது நாளாக நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீனவர்கள் விடுவிக்கப்படும் வரை தங்களது காலவரையற்ற வேலை நிறுத்தமும் உண்ணாவிரதப் போராட்டமும் நீடிக்கும் என அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
சில தினங்களுக்கு முன்பு கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த 55 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இதையடுத்து, அவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம், மன்னார் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இரு வெவ்வேறு சம்பவங்களில் 55 மீனவர்கள் கைது செய்யப்பட்டது தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 13 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து, அனைத்து மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் உள்ள மீனவர்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்றும் மீனவர் சங்கங்கள் அறிவித்தன. போராட்டம் காரணமாக ராமேசுவரத்தில் இருந்து மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்லாததால் அங்கு 800க்கும் அதிகமான விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இதேபோல் புதுக்கோட்டை மீனவர்களும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கி உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பாம்பன் பகுதி மீனவர்களும் இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
68 தமிழக மீனவர்களையும் 75 படகுகளையும் இலங்கை கடற்படையிடம் இருந்து மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் வழி கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அச்சமூட்டும் தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடைபெறுவதைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று முதல்வர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பாக் நீரிணைப் பகுதியில் மீன்பிடிப்பதற்கான பாரம்பரிய உரிமையை நிலைநாட்டுவதும் மீனவர்களின் உயிர், உடைமைகளைக் காப்பதும் அரசின் கடமை என்றும் முதல்வர் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

