சென்னை: நாடு தழுவிய அளவில் சென்னை விமான நிலையத்தில்தான் அதிகமான கடத்தல் தங்கம் பிடிபட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த அவர், 2021-22 நிதியாண்டில் மட்டும் சென்னை விமான நிலையத்தில் 130 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
சென்னைக்கு அடுத்தபடியாக, கோல்கத்தாவில் 128 கிலோ கடத்தல் தங்கமும் திருச்சி விமான நிலையத்தில் 78 கிலோவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2020-2021 நிதி ஆண்டில் தங்கக் கடத்தல் வெகுவாகக் குறைந்துள்ளது என்றார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
மேலும், அதற்கு முன்னதாக, 2019-20ஆம் நிதியாண்டில் டெல்லி, மும்பையில் அதிக அளவு கடத்தல் தங்கம் சிக்கியது என்றும் அவர் தமது பதிலில் குறிப்பிட்டார்.
"வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் 2019-20ஆம் ஆண்டு அறிக்கையில், நாடு முழுவதும் விமானம் மட்டுமல்லாமல், கடல் வழி, தரை வழி கடத்தி வரப்பட்ட சுமார் 185 மில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது," என்றார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

