மதுரை: பழமை வாய்ந்த கட்டடம் இடிந்து விழுந்ததில், காவலர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து மதுரை போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாநகர் விளக்குத்தூண் பகுதி அருகே அந்தப் பழமையான கட்டடம் இருந்தது. நேற்று முன்தினம் மதுரை காவல்துறையைச் சேர்ந்த இரு காவலர்கள் அப்பகுதியில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பழமை வாய்ந்த கட்டடம் அருகே அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, அது திடீரென இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் சரவணன் என்ற காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், உயிரிழந்த தலைமைக் காவலர் சரவணனின் குடும்பத்தாருக்கு நிவாரணமாக ரூ.25 லட்சமும் அவரது மனைவிக்கு அரசுப்பணியும் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
காயமடைந்த காவலருக்கு ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

