சென்னை: சென்னையில் உள்ள கோவில்களின் வாசலில் அமர்ந்து மக்களிடம் யாசகம் கேட்பதுபோல் கஞ்சா விற்று வந்த சாமியார் உள்பட மூவரை மைலாப்பூர் தனிப்படை காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
தன் மீது யாருக்கும் சந்தேகம் ஏற்படக்கூடாது என்பதற்காகவே நெடுநாள்களாக கஞ்சாவை சாமியார் வேடத்தில் விற்று வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
மாலை நேரத்தில் தனது காவி ஆடைக்குள்ளும் தலைப்பாகைக்குள்ளும் கஞ்சாவை மறைத்து வைத்து சாமியார் ஒருவர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஐஸ்ஹவுஸ் பகுதிக்கு மாறுவேடத்தில் வந்த காவல்துறை அதிகாரிகள், கஞ்சா வாங்குவதுபோல் சென்று சாமி யாரைக் கையும் களவுமாகக் கைது செய்தனர்.
விசாரணையில், சாமியார் ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தாமு என்கிற சேகர், 50, என்பது தெரியவந்தது. அப்பாவி மக்களுக்கு குறி சொல்வது போல் ராயப்பேட்டை, மைலாப்பூர், ஐஸ் ஹவுஸ் பகுதியில் கஞ்சா விற்பனையில் கடந்த சில ஆண்டுகளாகவே ஈடுபட்டு வந்த தாக அவர் கூறியுள்ளார்.
இவருக்கு கஞ்சா விற்பனை செய்த மொத்த வியாபாரிகளான தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா, 55, ஆசைத்தம்பி, 41, ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து 7 கிலோ கஞ்சாவையும் மைலாப்பூர் காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சாமியார் என்ற போர்வையில் கஞ்சா விற்பனை செய்த தாமு (நடுவில்) கைது செய்யப்பட்டார். ராஜா(இடது), ஆசைத்தம்பி ஆகிய இருவரும் கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து சாமியார் வேடமணிந்த தாமுவிடம் கொடுத்து விற்பனை செய்தது தெரியவர அவர்களும் கைது செய்யப்பட்டனர். படம்: தமிழக ஊடகம்

