மயிலாடுதுறை: கல்வி கற்க வயது ஒரு தடையல்ல என்கிறார் 82 வயது முதியவர் குருமூர்த்தி. "மனதில் ஆர்வம் இருந்தால் போதும். தள்ளாத வயதிலும் படிப்பைத் தயக்கமின்றி தொடரலாம்," என்று கூறும் குருமூர்த்தி, தனது 25வது பட்டப் படிப்பைத் தொடர்வதற்கு விண்ணப்பித்துள்ளார்.
அவருக்குப் பொன்னாடை போர்த்தி, வாழ்த்து தெரிவித்து விண்ணப்பப் படிவத்தை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பார்த்தசாரதி வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகில் உள்ள கதிராமங்கலத்தைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவர், பலதுறைத் தொழில்நுட்பக் கழக ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர்.
'கற்றது கையளவு' என்று கூறும் குருமூர்த்தி, இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல், படிப்பு மீது ஏற்பட்ட அலாதியான ஆர்வம் காரணமாக பி.ஏ., எம்.ஏ., எம்.பில்., பிஎச்டி உள்ளிட்ட 24 பட்டங்களைப் பெற்றுள்ளார்.
"படிப்பிற்கு ஆகும் செலவை நான் எப்போதுமே பெரிதாக நினைத்ததில்லை," என்று சொல் பவர், அறிவை வளர்ப்பதற்கு தனது படிப்பு உறுதுணை புரிந்துள்ள தாகவும் குறிப்பிடுகிறார்.
25வது பட்டப்படிப்பாக எம்.ஏ. போலிஸ் அட்மினிஸ்ட்ரேஷன் என்ற பாடத்தைத் தேர்வு செய்து, கடந்த 23ஆம் தேதி திறக்கப்பட்ட தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் படிவத்தையும் பாடப்புத்தகங்களையும் பெற்றுக்கொண்டார்.
இளைய தலைமுறையினர் 'வாட்ஸ்அப்' உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மூழ்கி நேரத்தை வீணடிப்பதாகவும் வாழ்க்கையை அர்த்தத்துடன் வாழவேண்டும் என்றும் குருமூர்த்தி அறிவுறுத்தி உள்ளார்.
படிப்பு மீது அதிக ஆர்வம் உள்ளதால் எனக்குப் பிடித்த பாடங்களைத் தேர்ந்தெடுத்து படித்து வருகிறேன். ஆத்ம திருப்தி தருவது கல்வி மட்டும்தான். புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்துவிட்டால் அதிலேயே மூழ்கிப் போகலாம். படிப்பில்தான் என் மகிழ்ச்சியே அடங்கியுள்ளது. ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையை, முழுமையாக வாழ்ந்த திருப்தி என் மனதில் உள்ளது.
25வது பட்டப் படிப்புக்குத் தயாராகும் குருமூர்த்தி

