செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
9e3cd1d0-361d-4b8d-9a40-2fb98456ec63
-

29 ஆண்டுகளுக்குப் பிறகு சிலைகள் மீட்பு

பனங்குடி: நாகப்பட்டினம் மாவட்டம், பனங்குடி கிராமத்தில் உள்ள தாளரணேசுவரர் கோவிலில் 1992ஆம் ஆண்டு காணாமல் போன சாமி சிலைகளை ஏறக்குறைய 29 ஆண்டு களுக்குப் பிறகு சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

கோயிலில் இருந்து மாயமான ஆடிப்பூர அம்மன் சிலை, விநாயகர் சிலை திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் ஆலயத்தில் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, சிலை திருட்டு வழக்குகள் நடைபெற்று வரும் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இவ்விரு சிலைகளும் நேற்று ஒப்படைக்கப்பட்டன. படம்: ஊடகம்

பழங்குடி ெபண்ணைக் காப்பாற்ற விடாமல் தாக்கிக்கொன்ற யானை

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் வனப்பகுதியில் சுண்டைக்காய் பறிக்கச் சென்ற பழங்குடியினப் பெண்களை யானை தாக்கியதில் அவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தியமங்கலத்தை அடுத்துள்ள ராமபைலூர் தொட்டி கிராமத்தைச் சேர்ந்த மசனி, 57, பொம்மி, ராஜாத்தி, மாரக்காள் ஆகிய நால்வரும் தாசன்குட்டை என்ற இடத்தில் சுண்டைக்காய் பறித்துக் கொண்டிருந்தனர். அப்போது, புதர் மறைவில் இருந்த ஒற்றை காட்டு யானை நால்வரையும் துரத்தியது. மசனியை தும்பிக்கையால் பிடித்து தூக்கி வீசியதில் அவர் உயிரிழந்தார். காயமடைந்த மூவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மசனியின் உடலை மீட்கவிடாமல் யானை மறித்துக்கொண்டு நின்றதால், யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

மனநலம் பாதித்தவரின் மானம் காத்த பெண்ணை பாராட்டும் மக்கள்

மதுரை: உடலில் துணி ஏதுமின்றி சாலையில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஆடவர் ஒருவருக்கு பெண் ஒருவர் ஆடை அணிவித்து, அவருக்கு உண்ண உணவு அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலியைச் சேர்ந்த சமூக சேவகியான நந்தினி, நெல்லை-மதுரை நான்குவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, மனநலம் பாதித்த ஆடவரை சில ஆண்கள் விரட்டி அடித்துள்ளனர். இதைக் கண்ட நந்தினி, தனது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த சால்வையை எடுத்துச்சென்று அவரது இடுப்பில் கட்டிவிட்டு, அருகில் இருந்த கடைக்குச் சென்று உணவு வாங்கி வந்து அவருக்கு ஊட்டியும் விட்டுள்ளார். இந்தக் காணொளியைக் கண்டு பலரும் நந்தினியைப் பாராட்டி வருகின்றனர்.