வேலூர்: ரயில்வே பாலத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக 23 ரயில்களின் சேவை திடீரென்று நேற்று முன்தினம் இரவு முதல் ரத்து செய்யப்பட்டதால், கிறிஸ்து மஸ் பண்டிகையைக் கொண்டாடு வதற்காக வெளியூருக்குப் பயணம் மேற்கொள்ள இருந்த பயணிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகினர்.
வேலூர் மாவட்டம், திருவலம் பகுதியில் பொன்னையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக ஜோலார்ப்பேட்டை, சென்னை, வேலூர், பெங்களூரு, மைசூரு, மங்களூரு, கோவை, ரேணிகுண்டா, அரக்கோணம் உள்ளிட்ட பகுதி களுக்குச் செல்லும் 23 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஏற்கெனவே புறப்பட்டுச் சென்ற ரயில்கள் வேறு வழித்தடத்தில் தாமதமாக வந்து சேர்வதால் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.
சென்னை சென்ட்ரல்-திரு வனந்தபுரம் ரயில்கள் இரு மார்க்கத்திலும் நேற்று ரத்து செய்யப்பட்டது.
இன்றைய கிறிஸ்துமஸ் தினத்திலும் மங்களூரு- சென்னை, ஆலப்புழா-சென்னை, ரேணிகுண்டா-மைசூரு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரத்து செய்யப்பட்ட ரயில்களுக் கான முன்பதிவுக் கட்டணம் திருப்பி அளிக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக சொந்த ஊர் திரும்ப இருந்த பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
ரயில்வே ஊழியர்கள் விரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
156 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலம் போதிய அளவில் பராமரிக்கப்படாமல் இருந்ததாலும் கடந்த மாதம் பொன்னையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாகவும் பாலத்தை தாங்கும் தூண்களில் மண் அரிப்பு ஏற்பட்டு, விரிசல் ஏற்பட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
காட்பாடி ரயில்வே ஊழியர்கள், நேற்று முன்தினம் மாலை பாலத்தை ஆய்வு செய்தபோது விரிசலைக் கண்டுபிடித்தனர். இதனால், பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படுவது தவிர்க்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காட்பாடி முதல் சென்னை இடை யேயான ரயில் பாதையில் ஒரு வழித்தடத்தில் மட்டும் சில ரயில்கள் இயக்கப்படுவதாக தகவல்.

