உடற்பிடிப்பு நிலையங்களில் கண்காணிப்பு கேமரா
சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் ஆயுா்வேத சிகிச்சை நிலையம் நடத்தி வருபவா் கிரிஜா. இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் "சட்ட விதிகளுக்கு உட்பட்டு சிகிச்சை அளித்து வருகிறோம். ஆனால் சோதனை என்ற பெயரில் காவலர்கள் அடிக்கடி வந்து செல்கின்றனர். அதற்கு தடைவிதிக்கவேண்டும்," என்று புகார் ஒன்றை அளித்து இருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், "காவலர்களின் நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது மட்டுமல்லாமல், குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணமாகவும் அவற்றை ஊக்குவிப்பதாகவும் அமைந்துவிடும். எனவே, மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது.
"இருந்தாலும் சென்னையில் இருப்பதுபோல தமிழகம் முழுவதும் உள்ள உடற்பிடிப்பு நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். அவ்வாறு கண்காணிக்கும் போது, நிலையங்களின் செயல்பாடுகளில் சந்தேகத்துக்கிடமாக இருந்தாலோ, தகவல்கள் கிடைத்தாலோ, சட்டவிதிகளைப் பின்பற்றி காவலர் நடவடிக்கை எடுக்கலாம்," என்று உத்தரவு பிறப்பித்தார்.
மாணவியருக்கு பாலியல் தொல்லை
பரமக்குடி: பரமக்குடி அருகே அரசு பள்ளியில் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் வசந்தகுமார் அளித்த புகாரின் பேரில் ஆசிரியர் ராமராஜ் கைது செய்யப்பட்டார்.
மீண்டும் ராஜேந்திர பாலாஜி மீது புகார்
சென்னை: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சத்துணவு பணியாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.10 லட்சம் வாங்கிக்கொண்டு மோசடி செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
'அரையாண்டு விடுமுறை அவசியமற்றது'
சென்னை: பள்ளிகள் தாமதமாகத் திறந்ததால் இந்தாண்டு காலாண்டு, அரையாண்டு தோ்வுகள் நடைபெறவில்லை. அதற்குப் பதிலாக திருப்புதல் தோ்வுகள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில் பள்ளிகளுக்கு வழக்கம்போல் டிசம்பா் 25 முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை அரையாண்டுத் தோ்வு விடுமுறை வழங்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிட்டாா்.
"20 மாதங்களுக்குப் பின் பள்ளிகள் தற்போதுதான் திறக்கப்பட்டுள்ளன. அதிலும் நவம்பா் மாதம் பலத்த மழை காரணமாக 10 நாள்கள் மட்டுமே வகுப்புகள் நடைபெற்றன. இந்தச் சூழலில் மீண்டும் விடுமுறை அளித்தால் மாணவா்களின் கல்வி பாதிக்கப்படும்," என்று தனியாா் பள்ளிகளின் நிா்வாகிகள், பெற்றோா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

