சென்னை மாநகரில் மட்டும் வாழ்வதற்கே தகுதியில்லாத வகையில் 23,000 வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் 40, 50 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டவை. அதனால், கட்டடத்தின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. பழைய கட்டடத்தை இடித்துவிட்டு புதிய வீடுகளை கட்டித்தர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்
சென்னை: சென்னையை அடுத்த திருவொற்றியூரில் உள்ள அரிவாக்குளம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புக் கட்டடம் நேற்று திடீரென இடிந்து விழுந்தது.
28 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டு சற்று சரிந்திருந்த நிலையில், குடியிருப்பாளர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறினர்.
இதையடுத்து, பெரிய அளவில் உயிர்ச் சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் குடியிருப்பில் இருந்த 24 வீடுகளும் தரைமட்டமானதை அடுத்து, பாதிப்படைந்தவர்களுக்கு உடனடியாக மாற்று வீடுகளும் நிவாரண உதவிகளும் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
"மக்கள் தங்களது பாதிப்பில் இருந்து மீளவும் புதிய வாழ்க்கை யைத் துவங்கவும் 24 குடும்பங்களுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளேன்," என்றார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசியபோது, சென்னை மாநகரில் மட்டும் வாழ்வதற்கே தகுதியில்லாத வகையில் 23,000 வீடுகள் உள்ளன. இதுபோன்ற வீடுகளை படிப்படியாக இடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் விரிசல் ஏற்பட்டபோது பெரும் சப்தம் கேட்டதாகவும் விரிசல் பெரிய அளவில் இருந்ததால் நேற்று காலையில் இருந்தே அங்கு வசித்தவர்கள் வீடுகளை விட்டு வெளியேறியதாகவும் தகவல்கள் கூறின.
கட்டட இடிபாடுகளில் இன்னும் யாராவது சிக்கியுள்ளனரா என தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர். இடிபாடுகளை அகற்றும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
திருவொற்றியூர் அரிவாக் குளத்தில் இருக்கும் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதில், மொத்தம் 336 அடிக்குமாடி வீடுகள், நான்கு கட்டடங்களாக உள்ளன. அவற்றில் 'டி' கட்டடத்தில் 24 வீடுகள் உள்ளன. இந்நிலையில், இந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்புக் கட்டடம் நேற்று இடிந்து விழுந்தது.
படம்:
தமிழக ஊடகம்

