சென்னை: மாநிலம் முழுவதும் கஞ்சா, ஹெராயின், குட்கா, மாவா உள்ளிட்ட போதைப்பொருள்களைக் கடத்தியது, விற்பனை செய்தது தொடர்பாக 6,623 பேரை கடந்த மூன்று வாரங்களாக தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பள்ளி, கல்லூரி அருகில் விற்கப்படும் போதைப்பொருள் புழக்கத் தைத் தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது மக்கள் பலரின் நெடுநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.
இந்நிலையில், தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவின் உத்தரவுப்படி 'ஆபரேஷன் கஞ்சா வேட்டை' என்ற பெயரில் மாநிலம் முழுவதும் கடந்த மூன்று வாரங்களாக அதிரடி சோதனை நடந்து வந்தது.
சோதனையின்போது பிடிபட்ட 6,623 குற்றவாளிகளிடமிருந்து ரூ.23 கோடி மதிப்பிலான ஹெராயின், ரூ.4.20 கோடி மதிப்பிலான குட்கா, ரூ1.80 கோடி மதிப்பிலான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் களைக் காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை தலைமை இயக்குநா் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் நடைபெற்ற சோதனையில் ரூ.23 கோடி மதிப்புள்ள 23 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனா்.
கடந்த மூன்று வாரங்களில் கஞ்சாவைக் கடத்தி, விற்பனை செய்து வந்த 871 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
அவா்களிடம் இருந்து ரூ.180 கோடி மதிப்புள்ள 1,774 கிலோ கஞ்சா, கடத்தலுக்குப் பயன்படுத்திய 164 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, மாநிலம் முழுவதும் பரவலாக கஞ்சா விற்பனை செய்து வந்த மொத்த வியாபாரிகளான பெரியசாமி, 39, சீனிவாசன், 39, ஆகிய இருவரையும் ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் வைத்து நாமக்கல் காவல் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதனால், கஞ்சா மொத்த வியாபாரம் பெரும் அளவில் முடக்கப்பட்டுள்ளது.
புகையிலைப் பொருள்கள் கடத்தியதாக 547 வழக்குகளில் 5,037 பேர் கைதாகி உள்ளனர். ரூ.420 கோடி மதிப்புள்ள 40 டன் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்ததாக 1,091 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.