கணவருக்காக காத்திருந்த புதுமணப் பெண் மீது காரை மோதிய ஓட்டுநர் கைது

கணவருக்காக காத்திருந்த புதுமணப் பெண் மீது காரை மோதிய ஓட்டுநர் கைது

1 mins read
e0910701-543c-4b3e-abdd-cc60776b3d34
விபத்துக்குள்ளான கார். படம்: இந்திய ஊடகம் -

குடிபோதையில் வேகமாக காரை ஓட்டிய ஆடவர் ஒருவர், அதன் கட்டுப்பாட்டை இழந்ததில், சாலையோரம் நின்றுகொண்டிருந்த மாது ஒருவர்மீது அந்த கார் ஏறியது. இந்தத் துயரச் சம்பவம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் திங்கட்கிழமை (டிசம்பர் 27) நிகழ்ந்தது.

கீதா பிரியா என்ற அந்த 25 வயது மாது, மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு ஒரு மணி நேரம் கழித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் புதிதாக திருமணமானவர்.

மருந்துக்கடை ஒன்றுக்கு வெளியே தம்முடைய கணவருக்காக அவர் காத்திருந்தபோது, அவ்வழியாக வந்த கார் அவர்மீது மோதியதாக காவல்துறை தெரிவித்தது.

புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக கணவர், மனைவி இருவரும் சென்னைக்கு வந்திருந்தனர். அவ்விருவரும் வங்கி ஒன்றில் ஊழியர்களாகப் பணிபுரிந்தனர்.

கீதாவின் கணவர் மணிகண்டன், 30, மருந்து வாங்குவதற்காக மருந்துக்கடைக்குச் சென்றிருந்தார். அக்கடைக்கு வெளியே சாலையோரமாக அவருக்காக கீதா காத்திருந்தார்.

அவ்வழியாக வேகமாக வந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த ஆட்டோ மீதும் இரு வாகனங்கள் மீதும் மோதிவிட்டு, கீதா மீது ஏறியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் காவல்துறையிடம் கூறினர்.

அங்கிருந்த வழிப்போக்கர்கள், அந்த காரின் பின் சக்கரத்துக்குக்கீழ் சிக்கிக்கொண்ட கீதாவை மீட்டு அவசர மருத்துவ வாகனத்தில் ஏற்றி அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி கீதா உயிரிழந்தார். அவருக்குத் தலையில் கடுமையான காயம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

கவனக்குறைவுடன் காரை வேகமாக ஓட்டி மரணம் விளைவித்ததற்காக மதன் எனும் அந்த கார் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர்.