சென்னை: குடிபோதையில் வேகமாக காரை ஓட்டிய ஆடவர் ஒருவர், கார் அதன் கட்டுப்பாட்டை இழந்ததில், சாலையோரம் நின்றுகொண்டிருந்த மாது ஒருவர்மீது மோதினார். தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் திங்களன்று இந்தச் சம்பவம் நடந்தது.
கவனக்குறைவுடன் காரை வேகமாக ஓட்டி மரணம் விளைவித்ததற்காக மதன் எனும் கார் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கீதா பிரியா, 25, என்ற மாது, மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு ஒரு மணி நேரம் கழித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் புதிதாக திருமணமானவர்.
மருந்துக்கடை ஒன்றுக்கு வெளியே தம்முடைய கணவருக்காக அவர் காத்திருந்தபோது, அவ்வழியாக வந்த கார் அவர்மீது மோதியதாக காவல்துறை கூறியது.
புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக கணவர், மனைவி இருவரும் சென்னைக்கு வந்திருந்தனர். அவ்விருவரும் வங்கி ஒன்றில் ஊழியர்களாகப் பணிபுரிந்தனர்.
கீதாவின் கணவர் மணிகண்டன், 30, மருந்து வாங்குவதற்காக மருந்துக்கடைக்குச் சென்றிருந்தார். அக்கடைக்கு வெளியே சாலையோரமாக கீதா காத்திருந்தார்.
அவ்வழியாக வேகமாக வந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த ஆட்டோ மீதும் இரு வாகனங்கள் மீதும் மோதிவிட்டு, கீதா மீது ஏறியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் காவல்துறையிடம் கூறினர்.
அங்கிருந்த வழிப்போக்கர்கள், காரின் பின் சக்கரத்தில் சிக்கிக்கொண்ட கீதாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், கீதா உயிரிழந்தார்.

