சென்னை: தமிழகத்தில் ஓமிக்ரான் கிருமிப் பரவல் சமூகப் பரவலாக மாறி வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
மாநிலத்தில் ஓமிக்ரான் அறிகுறிகளுடன் 118 பேர் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறிய அவர், அவா்களின் மாதிரிகள் சோதனைக்காக புனே நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
எனினும், சோதனை முடிவுகள் தாமதமாகவே தெரியவருவதால், அதற்குள் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை முடிந்து தங்களது வீடு திரும்பி விடுகின்றனர்.
இதனால், ஓமிக்ரான் தொற்றை உறுதி செய்வதற்கு ஆகும் கால தாமதத்தைக் குறைக்க தமிழகத்தில் உள்ள மரபியல் ஆய்வுக்கூடத்தைப் பயன்படுத்த அனுமதிக்குமாறு மத்தியக் குழுவினரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.
தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவைப் போல் தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது குறித்து இம்மாதம் 31ஆம் தேதி முதல்வர் முடிவெடுத்து அறிவிப்பார் எனத் தெரிவித்த அமைச்சர், ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட 34 பேரில் இன்னும் ஐவர் மட்டுமே சிகிச்சையில் இருப்பதாகவும் சொன்னார்.
தேனாம்பேட்டையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியபோது, "தமிழகத்தில் 118 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்தபின்னரே எத்தனை பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற விவரம் தெரியவரும்.
"வெளிநாடுகளில் இருந்து வருபவர்களிடம் இருந்து மட்டும் பரவி வந்த ஓமிக்ரான் தொற்று, இப்போது சமூக பரவல் என்ற நிலையை எட்டியுள்ளது.
"ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனை நோயாளி ஒருவரிடம் இருந்து பலருக்கும் தொற்று பரவியதை சமூகப் பரவலுக்கு உதாரணமாகக் கூறலாம்," என்றார்.
இதற்கிடையே, புத்தாண்டு, பொங்கல் என பண்டிகைகள் வரஉள்ளதால், மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்த்தால்தான் பாதிப்புகளைத் தவிர்க்கமுடியும். எனவே, பொது இடங்களில் புத்தாண்டுக் கொண்டாட்டம் வேண்டாம்," என சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் ஓமிக்ரான் பாதிப்பு குறித்து வனிதா, பர்பசா, சந்தோஷ்குமார், தினேஷ்பாபு உள்ளிட்ட நால்வர் கொண்ட மத்திய மருத்துவக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாடுகாணி, பாட்டவயல், சோலாடி உள்ளிட்ட எல்லையோர சோதனைச் சாவடிகளிலும் பொள்ளாச்சி அருகே உள்ள மீனாட்சிபுரம் சோதனைச் சாவடி யிலும் கண்காணிப்பை பலப்படுத்தி உள்ளனர்.

