செய்திக்கொத்து

3 mins read
6a305275-9ee3-417e-b8ff-733ef8d6f56f
-

தொழுவம் கட்டித் தர கோரிக்கை

தாம்பரம்: கால்நடைகளைப் பராமரிப்பதற்கு ஏதுவாக தொழுவங்கள், மேய்ச்சல் நில வசதிகளைச் செய்து தரும்படி கால்நடைகளை வளர்ப்போர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரத்திலும் அதன் சுற்று வட்டார கிராமங்களிலும் முன்னூறு பேர் மாடுகளைப் பராமரித்து, பால் வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கால்நடைகள் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரிந்தால் உரிமையாளருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவற்றைப் பராமரிப்பதற்கான வசதியைச் செய்துதரும்படி ஆட்சியர் ராகுல்நாத்திடம் மக்கள் மனு அளித்துள்ளனர்.

குஜராத் சென்ற 500 முதலைகள்

சென்னை: சென்னை முதலைப் பண்ணையில் இருந்து ஏறக்குறைய 500 முதலைகள் குஜராத் மாநிலம் ஜாம்நகருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் 8 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள முதலைப் பண்ைணயில் 14 வகை முதலைகள், 10 வகை ஆமைகள் என 5,000 உயிரினங்கள் உள்ளன. ஆண்டுதோறும் நான்கு லட்சம் பேர் இவற்றைப் பார்த்துச் செல்வது வழக்கம்.

ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக முதலை பண்ணைக்கு வருவாய் பாதிக்கப்பட்டது. இன்னும் நிதி நெருக்கடி தீராததால், வனத்துறையின் அனுமதியுடன் 500 முதலைகள் சரக்கு லாரிகளில் ஏற்றப்பட்டு குஜராத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிகிறது.

மாவட்டத்துக்கு ஒரு சட்டக்கல்லூரி

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, ''தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது போல் மாவட்டத்துக்கு ஒரு சட்டக்கல்லூரி அமைப்பதை முதல்வர் லட்சியமாகக் கொண்டுள்ளார். விரைவில் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பார். அனைத்து துறைகளிலும் தமிழகம் வளர்ச்சி அடைந்து வருகிறது,'' என்றார்.

ஒரு மாத பரோலில் வந்தார் நளினி

வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பில் வேலூர் பெண்கள் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி நிபந்தனைகளுடன் ஒரு மாத பரோலில் நேற்று காலை சிறையில் இருந்து வெளியே வந்து, காட்பாடியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். அவர் தங்கியிருக்கும் வீட்டின் வாயிலில் துப்பாக்கி ஏந்திய காவலர்களின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

'மின்கட்டண வரியை நீக்கவேண்டும்'

சென்னை: தமிழக மக்கள் மின் கட்டணத்தை ஏற்கெனவே அதிக அளவில் செலுத்தி வரும் நிலையில், தற்போது ஜிஎஸ்டி வரியையும் மறைமுகமாக மின் கட்டணத்தில் சேர்த்து வசூலிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதனால், மக்களுக்கு நிதிச்சுமை அதிகரித்துள்ளது. மின் கட்டணத்துக்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யவேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா். இந்த விவகாரத்தில் அரசு வெளிப்படையாக செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளாா்.

28 குடும்பங்கள்: தலா ரூ.1 லட்சம்

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் வீடு இடிந்து விழுந்ததில் பாதிக்கப்பட்ட 28 குடும்பங்களுக்கும் தலா ரூ.1 லட்சம் நிவாரண உதவியை அமைச்சர் அன்பரசன், சென்னை ஆட்சியர் விஜயராணி ஆகியோர் வழங்கினர். அத்துடன், 25 கிலோ அரிசி, பாய், தலையணை உள்ளிட்ட பொருள் களும் வழங்கப்பட்டன.

இதற்கிடையே, திருவொற்றியூரில் கட்டடம் விழுவதற்கு முன்பு அனைவரையும் எச்சரித்து, உயிரைக் காப்பாற்றியதாக தனியரசு என்பவரை மக்கள் பாராட்டி வருகின்றனர். தனியரசை முதல்வரும் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

100 திருக்குறள் எழுத தண்டனை

கோவை: கோவையில் கோவில் பூஜை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட தகராறில் 10 இளைஞர்களுக்கு 100 திருக்குறள்களை எழுத வைத்து, படிக்க வைத்து மதுக்கரை காவல்துறையினர் நூதன தண்டனை வழங்கினர். மரப்பாலம் பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலில் வாசிக்கப்பட்ட மேளத்திற்கு உள்ளூர் இளைஞர்கள் நடனமாடியபோது அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர் என்று கூறப்படுகிறது.