சென்னை: மாற்றுத்திறனாளிகளும் கடல் அலைகளை அருகில் கண்டு ரசிக்கவும் அவற்றில் கால் நனைக்கவும் வசதியாக சென்னை மெரினா கடற்கரையில் தற்காலிகப் பாதை அமைக்கப்பட்டிருக்கிறது.
அனைத்துலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி சென்னை மாநகராட்சி சார்பில் ஒரு வார காலம் நடைபெறும் நிகழ்ச்சியையொட்டி இந்த பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், 'சிறிய பணிதான் இது; பெரிய மாற்றத்துக்குத் தொடக்கமும் கூட' என்று குறிப்பிட்டுள்ளார்.
"எத்தனை முறை சென்றாலும் சலிக்காதது கடல் என்பார்கள். அந்தக் கடல் அலையில் ஒருமுறையேனும் கால் நனைக்க நினைத்திருந்த மாற்றுத்திறனாளிகளின் எண்ணம் நனவாகும் வண்ணம் தற்காலிகப் பாதையை ஏற்படுத்தி உள்ளோம்.
"விரைவில் நிரந்தரம் ஆக்குவோம்," என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மெரினா கடற்கரையில் சுமார் 200 மீட்டர் நீளத்திற்கு மரப்பலகைகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த தற்காலிக பாதையில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக, மணற்பரப்பில் இயங்கக்கூடிய ஐந்து சக்கர நாற்காலிகள் வைக்கப்பட்டுள்ளன.

