அரியலூர்: பத்தாம் வகுப்பு மாணவனைக் காதலித்து திருமணம் செய்த பள்ளி ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதான பரத் என்ற மாணவர், தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், அதே பள்ளியில் பணியாற்றிய இளம் ஆசிரியையுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. நாள்களின் போக்கில் இருவரும் நெருங்கிப் பழகத் தொடங்கி உள்ளனர். ஒரு கட்டத்தில் இது காதலாக மாறியுள்ளது.
இது குறித்து மாணவனின் குடும்பத்தாருக்குத் தெரியவந்தபோது, அவரைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் மாணவரும் அந்த ஆசிரியையும் வீட்டை விட்டு ஓட்டம்பிடித்தனர். பின்னர் பெரும்பலூரில் உள்ள கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகத் தெரிகிறது.
அதன் பிறகும் மாணவரின் வீட்டார் இந்த காதலை ஏற்றுக்கொள்ளாததை அடுத்து, மனமுடைந்த இருவரும் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றுள்ளனர்.
இதையடுத்து, மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர் சிகிச்சைக்குப் பின் நலமடைந்த நிலையில், அந்த ஆசிரியை உயிருக்குப் போராடி வந்தார்.
இந்நிலையில், மாணவரின் குடும்பத்தார் அளித்த புகாரை அடுத்து, அந்த இளம் ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

