மதுரை: சிறைக்கைதிகள் இரு குழுக்களாகப் பிரிந்து மோதிக் கொண்டதால் மதுரை மத்திய சிறையில் பதற்றம் நிலவியது.
கைதிகள் சிலர் கற்கள், போத்தல்கள் ஆகியவற்றை வீசி எறிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். மேலும் சிலர் சிறைச்சாலையில் உள்ள மாடிச்சுவரின் மீது ஏறி நின்று, கையில் கிடைத்தவற்றை எல்லாம் வெளியே வீசி எறிந்தனர்.
நேற்று முன்தினம் மதிய உணவு இடைவெளியின்போது இரு குழுக்களுக்கு இடையே மோதல் வெடித்தது.
அப்போது ஒருதரப்பைச் சேர்ந்த கைதி ஒருவரை மட்டும் சிறைக்காவலர்கள் விசாரணைக்காக அழைத்துச் சென்றதாகவும் இதனால் அத்தரப்பினர் கோபமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
அவர்கள் சிறை நிர்வாகத்துக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியதுடன், கையில் கிடைத்த கற்கள் உள்ளிட்டவற்றை சிறைக்கு வெளியே வீசி எறிந்தனர். இதனால் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது கற்கள் விழுந்ததில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது.
சில கைதிகள் தங்களது உடலில் பிளேடால் கிழித்தும் காயப்படுத்திக்கொண்டனர். இதையடுத்து இருதரப்பினரும் மீண்டும் மோதிக்கொள்வதைத் தவிர்க்கும் பொருட்டு சிறைக் கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அதன் பின்னர் அமைதி திரும்பியதாகவும் ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
அரசியல் பிரமுகர் ஒருவருக்கும் திருச்சியைச் சேர்ந்த ஒரு கைதிக்கும் இடையேயான மோதல்தான் இந்த சம்பவத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
காயமடைந்தவர்களுக்கு சிறை வளாகத்தில் உள்ள மருத்துவர் சிகிச்சை அளித்தார்.
சிறை வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

