சென்னை: ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, இன்று நள்ளிரவு பொதுமக்கள் கோவில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இதற்கு தடையேதும் விதிக்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.
புத்தாண்டையொட்டி சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு 12 மணிக்குத் தொடங்கி நாளை காலை ஐந்து மணி வரை போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் நள்ளிரவு கோவில்களில் நடைபெறும் சிறப்புப் பூசைகளில் எவ்வாறு பங்கேற்பது என பக்தர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, கோவில்களுக்குச் செல்ல தடை ஏதும் இல்லை என்றார்.
"உரிய சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து மக்கள் சாமி தரிசனம் மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் கூட்டமாக ஒரே நேரத்தில் கோவில்களில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்.
"ஓமிக்ரான் தொற்றுப் பரவலை மனதில் கொண்டு பொறுப்புடன் நடந்துகொண்டால் சிக்கல் இல்லை," என்றார் அமைச்சர் சேகர்பாபு.

