அமைச்சர்: பெண் சிசுக்கொலைகளைத் தடுக்க குழு அமைக்கப்படும்
மதுரை: தமிழகத்தில் அண்மைக் காலத்தில் குழந்தைத் திருமணம், பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்கள் அதிகரித்து வருவதாக சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். பெண் சிசுக்கொலைகளைத் தடுப்பதற்கென தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார். "உசிலம்பட்டி பகுதியில்தான் பெண் சிசுக்கொலைகள் அதி கம் பதிவாகியுள்ளன. இனி சிசுக்கொலைகளைத் தவிர்க்க காவல்துறையுடன் இணைந்து செயல்படும் தனிக்குழுக்கள் அமைக்கப்படும். சிசுக்கொலை குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும் கண்காணிப்பும் தீவிரமாக்கப்படும்," என்றார் அமைச்சர் கீதாஜீவன்.
எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு
சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் எழுதிய 'சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை' என்ற சிறுகதை தொகுப்புக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. 2021ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெறும் எழுத்தாளர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் நாடு முழுவதும் 20 மொழிகளைச் சேர்ந்த படைப்பாளிகளுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
துபாய்க்கு கடத்த முயற்சி: ரூ.6 கோடி மதிப்புள்ள வைரக்கற்கள் பறிமுதல்
சென்னை: துபாய்க்கு கடத்தப்பட இருந்த ஆறு கோடி ரூபாய் மதிப்புள்ள வைரக்கற்களை சுங்கத்துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அளித்த ரகசிய தகவலின் பேரில் குறிப்பிட்ட விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டனர். அப்போது சென்னையைச் சேர்ந்த 30 வயது இளையர் மீது சந்தேகம் எழவே, அவரது உடமைகளை அதிகாரிகள் தீவிரமாகச் சோதனையிட்டனர். அப்போது அவரது பெட்டியில் வித்தியாசமான தொலைநோக்கிக் கருவி இருப்பது தெரிய வந்தது. அதைப் பிரித்துப் பார்த்தபோது வைரக்கற்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது அம்பலமானது.
மீனவர்களை மீட்க துரித நடவடிக்கை: அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்து
மதுரை: இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 68 பேரை விடுவிக்க மத்திய அரசு துரித
கதியில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றக் கிளை அறிவுறுத்தி உள்ளது. இது தொடர் பான மனுவை விசாரித்த நீதிபதிகள், "மீனவர்கள் புத்தாண்டு தினத்தை தங்கள் குடும்பத்தாருடன் கொண்டாட வேண்டும். அதற்கேற்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று மத்திய அரசு வழக்கறிஞரிடம் தெரிவித்தனர்.
நீலகிரியில் பனிப்பொழிவு அதிகரிப்பு
நீலகிரி: நீலகிரியில் கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 17 டிகிரியாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை ஒரு டிகிரி செல்சியஸ் ஆக வும் பதிவாகி உள்ளது. பல இடங்கள் வெள்ளை நிற கம்பளத்தைக் கொண்டு போர்த்தியது போல் காட்சி அளிக்கின்றன. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

