சென்னை: தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் விரைவில் மருத்துவக் கல்லூரியை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமன்றத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தெரிவித்தார்.
இவ்வாண்டிற்கான முதல் சட்டமன்றக் கூட்டம் கடந்த 5ஆம் தேதி முதல் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது.
ஆளுநர் உரையுடன் துவங்கிய அவைக்கூட்டம் நேற்றுடன் நிறைவடைந்தது.
நேற்றைய கேள்வி அங்கத்தின் போது, சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களின் முக்கிய தேவைகளை முன்வைத்து கேள்வி எழுப்பினர்.
சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் மு.பன்னீர்செல்வம் மயிலாடுதுறை மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி துவங்க அரசு முன்வருமா எனக் கேட்டார்.
அதற்கு மா.சுப்பிரமணியன் பதிலளித்தபோது, மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், தென்காசி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் படிப்படியாக மருத்துவக் கல்லூரிகளைத் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து பேசிய கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் காந்தி, மதுரை, கரூர், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கெனவே ஜவுளிப் பூங்கா செயல்பட்டு வருகிறது. இதனால் சங்கரன் கோவிலில் அமைக்கும் கோரிக்கை எழவில்லை. சங்கரன்கோவில் தொகுதியில் பருத்தி கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என்று கூறினார்.

