சென்னை: தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி வரும் 12ஆம் தேதி திறந்துவைக்கிறார்.
பிரதமர் நேரில் வந்து திறந்துவைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் தொற்று அதிகரித்ததன் காரணமாக, அவர் காணொளி வசதி மூலம் திறப்பு விழா நிகழ்வில் பங்கேற்பார் எனத் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் ஏற்கெனவே 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,125 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், கூடுதல் மாணவர்களைச் சேர்க்க ஏதுவாக 11 புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க அனுமதி வழங்கியது மத்திய அரசு.
இதையடுத்து மருத்துவக் கல்லூரிகளே இல்லாத மாவட்டங்களில் தலா ஒரு மருத்துவக் கல்லூரி வீதம் திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்்பூர், நீலகிரி, நாகை, நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் இந்த மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கல்லூரியிலும் தலா 150 மாணவர்கள் வீதம் மொத்தம் 1,650 புது மாணவர்களைச் சேர்க்கலாம்.

