சென்னை: மாமல்லபுரம் பகுதியில் உள்ள ஒரு விருந்தினர் இல்லத்தில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள 12 ஐம்பொன் சிலைகளை காவல்துறையினர் கைப்பற்றி உள்ளனர். அதை வெளிநாடுகளுக்கு கடத்த திட்டமிட்டிருந்த காஷ்மீரைச் சேர்ந்த ஜாவித்ஷா என்பவர் கைதானார்.
தங்களுக்குக் கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, அக்குறிப்பிட்ட விருந்தினர்களின் இல்லத்தில் சோதனை மேற்கொண்டபோது, இச்சிலைகள் சிக்கியதாகவும் அவற்றில் பல 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்றும் தமிழக சிலை கடத்தல் பிரிவு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி தெரிவித்துள்ளார்.
"பார்வதி சிலை கடத்தப்படுவதாகத்தான் எங்களுக்குத் தகவல் கிடைத்தது. ஆனால், சோதனை நடத்தியபோது, 11 சிலைகள் மட்டுமே கிடைத்தன.
பார்வதி சிலையை ஒப்படைத்தால் மற்ற சிலைகளைக் கொடுத்துவிடுவதாக ஜாவித்ஷாவிடம் பேரம் பேசினோம். அதையடுத்து, அதே வீட்டில் புதைத்து வைத்திருந்த பார்வதி சிலையை அவர் எடுத்துக்கொடுத்தார்.
"12 சிலைகளும் சுமார் ரூ.40 கோடி மதிப்புள்ளவை என கணக்கிட்டுள்ளோம். இந்தச் சிலைகள் எந்த கோவிலில் இருந்து திருடப்பட்டவை என்பது பற்றி விசாரித்து வருகிறோம்," என்றார் டிஜிபி ஜெயந்த் முரளி.
கைப்பற்றப்பட்ட சிலைகளில் மிகவும் அரிதான ராவணன் சிலையும் உள்ளது. மகாராஷ்டிரா உட்பட நாட்டின் ஐந்து மாநிலங்களில் மட்டுமே ராவணனுக்கு கோவில் உள்ள நிலையில், இந்தச் சிலை எங்கிருந்து திருடப்பட்டது என்பதைக் கண்டறிய விசாரணை தொடங்கி உள்ளது.
மேலும், இக்குறிப்பிட்ட சிலை இலங்கையில் இருந்து கடத்திவரப் பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

