மதுரை: மதுரை மாவட்டத்தின் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் பொங்கல் திருநாளையொட்டி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 14ஆம் தேதி அவனியாபுரத்திலும், ஜனவரி 15ல் பாலமேட்டிலும், ஜனவரி 17ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அங்கு கொரோனா கிருமிப்பரவல் தீவிரமடைந்து வருவதையடுத்து ஜல்லிக்கட்டில் வீரர்களும் பார்வையாளர்களும் தொற்றுக் கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதை உறுதிசெய்யும் வகையில் மதுரை மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் காவல் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதியளித்துள்ளது. போட்டிகளை பாதுகாப்புடன் நடத்துவதற்கு வழிகாட்டி விதிமுறைகளை வகுத்துத் தந்துள்ளது.
ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் இடங்களில் மரத்தடுப்புகள் அமைத்தல், மாடுகள் உள்ளே, வெளியே வந்து செல்லும் இடங்கள், பார்வையாளர்கள் அமரும் இடம், வாடிவாசல், அவசரக் கால வழி போன்றவற்றுக்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
மேலும், போட்டி நடக்கும் நாளில் மருத்துவ முகாம்கள், போட்டியில் பங்கேற்போர், பார்வையாளர்களுக்கான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைத் தயார்செய்யும் பணிகளும் நடைபெறுகின்றன.
ஜல்லிக்கட்டுப் போட்டிகளைக் காண உள்ளூர் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும் என்று காவல்துறை கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பார்வையாளர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படும். மேலும், இரண்டு தவணை தடுப்பூசிகள் போட்டவர்கள் மட்டுமே போட்டியைக் காண அனுமதிக்கப்படுவர் என்றும் அவர் கூறினார். அதேபோல் போட்டியில் பங்கேற்கும் காளையின் உரிமையாளர் மற்றும் அவரது உதவியாளர் என இரண்டு பேருக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும்.
விதிமுறைகள் மீறப்படுவது தெரிந்தால் அவர்களது காளை போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பை இழந்துவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டுப் போட்டிகளைக் காண்பதற்கு வழக்கமாக வெளியூரில் இருந்து ஆயிரக்கணக்கானோர் மதுரைக்கு வண்டி கட்டிக்கொண்டு வந்துவிடுவர். அதுபோன்று எதுவும் நிகழாமல் இருக்க, மதுரைக்குள் நுழையும் இடங்களில் எல்லாம் தடுப்புவேலிகள் அமைத்து தீவிரமாகக் கண்காணிக்கப்படும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
மதுரை மாவட்ட நிர்வாகம் தனியாக இணையத்தள முகவரியை ஏற்படுத்தி அதன் மூலம் மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்கள் பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்க, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 3,900 மாடுபிடி வீரர்களும் 1,600 காளை உரிமையாளர்களும் தங்கள் பெயர்களை இணையம் மூலம் பதிவு செய்துள்ளனர்.

