திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே சிராவயலில் ஆண்டுதோறும் தை மூன்றாம் நாள் மஞ்சுவிரட்டு கொண்டாடப்படும். இந்த மஞ்சுவிரட்டைக் காண வெளியூர்களில் இருந்து வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் கூடுவர்.
மிகவும் பிரபலமான இந்த சிராவயல் மஞ்சுவிரட்டு, கொரோனா தொற்று காரணமாக ஜனவரி 17ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதற்கு மறுநாள் கண்டுப்பட்டி மஞ்சுவிரட்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிராவயலில் ஆண்டுதோறும் தை மூன்றாம் நாள் மஞ்சுவிரட்டு நடத்தப்படுகிறது. இந்த மஞ்சு விரட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கும்.
இந்நிலையில், ஜனவரி 16ஆம் தேதி முழு ஊரடங்கால் மஞ்சுவிரட்டு ஜனவரி 17ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பாரம்பரிய முறைப்படி சிராவயலில் மஞ்சு விரட்டு திடல் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. திடலை சுத்தம் செய்து தொழு மற்றும் பாதுகாப்பு வேலி அமைத்தல், பார்வையாளர்கள் அமரும் இடத்தைத் தயார்செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
மஞ்சுவிரட்டு அன்று பெரியநாயகி அம்மன், தேனாட்சி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடக்கும். தொடர்ந்து வாண வேடிக்கை, மேளதாளத்துடன் மஞ்சுவிரட்டு தொழுவுக்கு கிராம மக்கள் செல்வர்.
தொழுவில் உள்ள மாடுகளுக்கு வேட்டி, துண்டு அணிவித்து மரியாதை செய்வர். தொடர்ந்து கோயில் காளைகளை அவிழ்த்து விட்டதும், மற்ற காளைகள் அவிழ்த்து விடப்படும்.
சிராவயல் மஞ்சுவிரட்டையொட்டி திருப்பத்தூர், பிள்ளையார்பட்டி, தென்கரை, அதிகரம், கிளாமடம், மருதங்குடி, கும்மங்குடி உள்ளிட்ட பகுதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளன.

