பள்ளிக்கு ரூ.1 லட்சம் நன்கொடை கொடுத்த ஏழைப் பெண்
திருப்பூர்: சின்னவீரம்பட்டியில் உடுமலை - திருப்பூர் சாலையில் தாயம்மாள் என்ற பெண் கணவருடன் இணைந்து இளநீர் வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் சொந்த ஊரில் உள்ள அரசுப் பள்ளிக்குச் சென்ற தாயம்மாள் அங்கு கட்டடப் பணிகள் நடைபெறுவதை பார்த்து தானும் ஒரு லட்ச ரூபாய் நன்கொடை கொடுத்து உதவி புரிந்துள்ளார். அவரது இந்த சேவை பற்றி அறிந்த மாவட்ட ஆட்சியர் நேரில் அழைத்து பாராட்டினார்.
சென்னையில் செம்மொழித் தமிழ்
மத்திய நிறுவனத்திற்கு புதிய வளாகம்
சென்னை: சென்னை பெரும்பாக்கத்தில் ரூ.24.65 கோடி மதிப்பில் 70,000 சதுர அடி பரப்பில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு புதிய வளாகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு முதல் தரமணியில் தற்காலிக கட்டடத்தில் செயல்பட்டு வந்த செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு நிரந்தர கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டு, கடந்த 2017ஆம் ஆண்டு முதல் பணிகள் நடைபெற்றது. இந்நிறுவனத்தின் புதிய கட்டடத்தை நேற்று பிரதமர் நரேந்திர மோடி மெய்நிகர் வாயிலாக திறந்து வைத்தார்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் முதுகலை, முனைவர், முனைவர் பட்ட மேலாய்வு உள்ளிட்டவற்றில் செம்மொழித் தமிழைக் கற்கவும், ஆராய்ச்சி மேற்கொள்ளவும் தேவையான வாய்ப்புகளை உருவாக்குதல், ஆய்வு நூல்களைப் பதிப்பித்து வெளியிடுதல், பழந்தமிழ் நூல்களை பிறமொழிகளில் மொழிபெயர்த்து தமிழ் மொழியின் செழுமையை உலகறியச் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.
கோவில் வருகையாளர்கள்,
காணிக்கை கண்காணிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள முக்கிய திருக்கோவில்களின் அன்றாட நிகழ்வுகளைக் கண்காணிப்பதற்கு ஆணையர் அலுவலகத்தில், கோவில்களின் கண்காணிப்புப் புகைப்படக்கருவிகள் மூலம் கட்டுப்பாட்டு அறை இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கோயில்களில் நடைபெறும் அன்னதானம், முடிகாணிக்கை, பக்தர்களின் கூட்டம் ஆகியவை கண்காணிக்கப்பட்டு பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய வழிவகுக்கப்படும். கோவில்களின் நிகழ்வுகளை
ஆணையர் அலுவலகக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து நேரலை மூலம் கண்காணிக்க முடியும். இதன்மூலம் வெளிப்படைத் தன்மையுடன் கோவில்களில் நடைபெறுவதை உடனுக்குடன் கண்காணிப்பதுடன் குறைகளும் உடனுக்குடன் களையப்படும் என்கிறது தமிழக அரசு.

