சென்னை: சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த குற்றச்சாட்டு தொடர்பில், 26 வயது வாலிபர் ராஜாவுக்கு(படம்) கீழ் நீதிமன்றம் வழங்கிய தூக்குத்தண்டனை நியாய மானதே என உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.
"வழக்கை முறையாக விசாரணை செய்தபின்னரே மகளிர் நீதிமன்றம் தூக்குத் தண்டனையை தீர்ப்பாக வழங்கி உள்ளது. அதை மாற்றி தீர்ப்பு வழங்க எந்த முகாந்திரமும் இல்லை. எனவே, ஏற்கெனவே விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை தீர்ப்பையே இப்போதும் உறுதி செய்கிறோம்," என நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் அமர்வு தீர்ப்பின் போது தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிவேல் என்ற ராஜா. இவர், கடந்த ஆண்டு ஏம்பல் பகுதியில் சிறுமி ஒருவரை, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். இதையடுத்து, ராஜா கைதானார். இவ்வழக்கை விசாரித்த புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம், கடந்த 2020 டிசம்பரில் ராஜாவுக்கு தூக்குத் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவது குறித்து, புதுக்கோட்டை காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தண்டனை சரியானதே என நீதிபதிகள் தீர்ப்பு கூறினர்.

