சென்னை: மாநிலத்தில் 61 இடங்களில் 24 மணி நேரமும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய ஒரு லட்சம் பேருக்கு கொவிட்-19 பரிசோதனைகள் செய்யப்படுவதாக தெரிவித்த அவர், பரிசோதனையைச் செய்துகொள்ள பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அறிவுறுத்தினார்.
சென்னை கிண்டி கிங் பரிசோதனை மையத்தில் நேற்று நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் கலந்துகொண்டபின்னர் செய்தியாளர்களை அமைச்சர் சந்தித்துப் பேசினார்.
"தமிழகத்தில் 75% சிறார்களுக்கு அதாவது, 23 லட்சத்திற்கும் மேலான சிறார்களுக்கு தடுப்பூசி ேபாடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 61 இடங்களில் 24 மணி நேரமும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
"கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று விதமாகப் பிரிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
"கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளவர்கள் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா அறிகுறிகள் இருந்தால் பொதுமக்கள் பயப்படாமல் பரிசோதனை செய்துகொள்ளவேண்டும். பரிசோதனை செய்ய பொதுமக்கள் அச்சப்படக் கூடாது," என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

