தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சென்னை விமான நிலையத்தில் தங்கம், வெளிநாட்டு நாணயங்கள் பறிமுதல்

1 mins read
e00d73fd-833a-43f9-8a12-d4876cc677c9
பறிமுதல் செய்யப்பட்ட தங்கப் பசை. படம்: சென்னை விமான நிலைய சுங்கத்துறை -

ஐக்கிய அரபு சிற்றரசுகளின் சார்ஜாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய பயணி ஒருவரிடம் இருந்து செவ்வாய்க்கிழமை (ஜனவரி 11) சுங்கத்துறை அதிகாரிகள் 1.386 கிலோகிராம் எடையுள்ள தங்கத்தைப் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.60.27 லட்சம்.

ஏர் அரேபியா விமானத்தில் சென்னை வந்திறங்கிய அந்த ஆடவர், 696 கிராம் எடையுடைய தங்கப் பசையை (gold paste) தம்முடைய மலக்குடலுக்குள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், தம்முடைய சட்டையிலும் காற்சட்டையிலும் 690 கிராம் எடையுள்ள தங்கப் பசையையும் அவர் ஒளித்து வைத்திருந்தார்.

தங்கத்தை ஒளித்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையே, சென்னையில் இருந்து துபாய் செல்லும் பயணிகள் மூவரிடம் இருந்து ரூ.55.29 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு நாணயங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

எமிரேட்ஸ் விமானத்தில் துபாய் செல்லவிருந்த அந்த மூவரிடம் சந்தேகத்தில் பேரில் விசாரணை நடத்தியதில், அவர்கள் வெளிநாட்டு நாணயங்கள் வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

29,500 அமெரிக்க டாலர், 115,000 திர்ஹம், 1,840 குவைத் தினார், 2,450 ஓமான் ரியால், 960 பக்ரேன் தினார் மதிப்பிலான வெளிநாட்டு நாணயங்கள் அதிகாரிகளின் பிடியில் சிக்கின. அவற்றின் இந்திய ரூபாய் மதிப்பு 55.29 லட்சம்.