சென்னை: உலகெங்கும் வாழும் தமிழர்கள் நேற்று பொங்கல் திருநாளைக் கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
கொவிட்-19 சூழ்நிலையில் பல கட்டுப்பாடுகளுக்கு இடையிலும் ஊக்கம் குறையாமல் அந்த நான்கு நாள் விழாவைத் தமிழர்கள் பெரும் உவகையுடன் கொண்டாடி வருகிறார்கள்.
உழவு தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் சூரியன், தண்ணீர் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகக் கொண்டாடப்படும் பொங்கல் விழாவில் உறவுகளைப் பேணுவது, முதியோர்களுக்கு மரியாதை செலுத்துவது உள்ளிட்ட உயரிய பண்புகளையும் தமிழர்கள் கடைப்பிடிக்கிறார்கள்.
பல உலகத் தலைவர்கள், இந்தியப் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் பொங்கல் வாழ்த்து தெரிவித்து தமிழர்களின் உயரிய குணநலன்களைப் போற்றி புகழ்ந்துள்ளனர்.
நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்துவதைக் குறைத்துகொள்வோம் என்ற முடிவை இந்தப் பொங்கல் பண்டிகையின் உறுதியாக ஏற்றுக்கொள்வோம் என்று தமிழக முதல்வர் தனது செய்தியில் குறிப்பிட்டு இருக்கிறார்.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டுகள் நடைபெறுவது தொன்றுதொட்டு வழக்கமாக இருந்து வருகிறது.
அதையொட்டி மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடக்கின்றன. அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நேற்று வெகு விமரிசையாக நடந்தது.
பாலமேட்டில் இன்றும் அலங்காநல்லூரில் நாளையும் அந்தப் போட்டி இடம்பெறுகிறது. முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே தச்சன்குறிச்சியில் புதன்கிழமை நடந்தது. கொவிட்-19 கட்டுப்பாட்டுடன் அவனியாபுரத்தில் நடந்த போட்டியில் 300 வீரர்களோடு 700 காளைகளும் பங்கெடுத்தன.
மாடுபிடி வீரர்களுக்கும் காளை உரிமையாளர்களுக்கும் உதவியாளர்களுக்கும் கொரோனா தொற்று இல்லாத சான்றிதழ் கட்டாயம் பெறப்பட்டு கண்காணிக்கப்பட்டது. போட்டி தொடங்கும் முன்பாகவே அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்த பின்னரே களத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
கட்டுப்பாடுகள் காரணமாக 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். காளை முட்டி ஒருவர் மாண்டதாகவும் சுமார் 75 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
போட்டியில் சிறப்பாகச் செயல்பட்ட காளைக்கு முதல்வர் சார்பில் ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது. சிறந்த மாடுபிடி வீரருக்குச் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி சார்பில் மோட்டார் சைக்கிள் கொடுக்கப்பட்டது.
அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி 24 காளைகளை அடக்கி முதல் பரிசை பெற்றார். வலையங் குளம் பகுதியைச் சேர்ந்த முருகன் 19 காளைகளை அடக்கி 2வது பரிசை பெற்றார். இதர ஏராளமான பரிசுகளை வீரர்களுடன் காளைகளும் பெற்றுச் சென்றன.

