சென்னை: தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்ட கிராமம் ஒன்றில் ஏழு ஆண்டுகளுக்கு முன் ஒருவர் நாட்டு துப்பாக்கியால் தெரு நாயைச் சுட்டுக்கொல்ல முயன்றபோது குறி தவறி ஒரு மாது மீது குண்டு பாய்ந்துவிட்டது. அந்த மாது மாண்டுவிட்டார்.
மாதுவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு கொடுக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் இப்போது உத்தரவிட்டு உள்ளது.
எறையூர் என்ற ஊரைச் சேர்ந்த விஜயா என்ற மாது குண்டு பாய்ந்து மாண்டார். அவருடைய புதல்வரான ஜி. பாபு என்பவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, பாபு குடும்பத்திற்கு ரூ. 5 லட்சத்தை பெரம்பலூர் ஆட்சியரும் எஞ்சிய தொகையை சம்பவம் நிகழ்ந்த ஊர் பஞ்சாயத்து தலைவரும் இரண்டு வார்டு உறுப்பினர் களும் எட்டு வாரத்திற்குள் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
எறையூரில் 15 பேரை கடித்துக் குதறிவிட்ட ஒரு வெறிநாயை சுட்டுக்கொல்ல 2015 பிப்ரவரி 25ஆம் தேதி ராமதுரை என்பவரை பஞ்சாயத்து தலைவரும் வார்டு உறுப்பினர்களும் அமர்த்தினர். ராமதுரை நாயைக் குறிவைத்து சுட்ட போது குண்டு மாது மீது பாய்ந்துவிட்டது.

