செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
5bb91123-563c-4111-96af-4bedc1e441ce
-

அதிக முதலீடு தமிழகம் வருகை

சென்னை: தமிழ்நாட்டிற்கு 2021 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை வந்த வெளிநாட்டு நேரடி முதலீடுகள் 18% கூடி 8,634 கோடி ரூபாயாக இருந்தது.

அது, அதற்கு முந்தைய ஆண்டில் அதே காலத்தில் ரூ. 7,062 கோடியாக இருந்ததாக தமிழக தொழில்துறை மாநில வர்த்தக மேம்பாட்டுத் துறை தெரிவித்தது.

இந்தத் துறை மத்திய வர்த்தக, தொழில் அமைச்சின் கீழ் செயல்படும் அமைப்பாகும். கொவிட்-19 உள்ளிட்ட பல பிரச்சினைகள் இருந்தாலும் தமிழ்நாடு வலுவான மீட்சித்திறனைக் கொண்டுள்ள பொருளியலாகத் தொடர்கிறது என்று மேம்பாட்டு ஊக்குவிப்பு அமைப்பான 'தமிழ்நாடு வழிகாட்டி' என்ற அமைப்பின் நிர்வாகி பூஜா குல்கர்னி தெரிவித்துள்ளார்.

ராஜேந்திர பாலாஜி மீது

புதிதாக ஒரு புகார்

கோவை: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கோவை தொண்டாமுத்தூரில் கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில், திமுக தலைவர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி, அவர்கள் குடும்பம் குறித்து தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக பேசியதாக அதிமுகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் அலுவலகத்தில் புதிதாக புகார் ஒன்றைத் தெரிவித்தார்.

தன் புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறை தலைமை அதிகாரி, அதை காவல்துறை இயக்குநர் அலுவலகத்திலும் பதிவு செய்யுமாறு அறிவித்து உள்ளதாக புகழேந்தி தெரிவித்தார்.

ரூ.218 கோடி செலவிட்ட திமுக

புதுடெல்லி: இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 2020-21ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் தணிக்கை அறிக்கையைத் தேர்தல் ஆணையத்திடம் அண்மையில் தாக்கல் செய்தன.

அதன்படி, அந்த நிதியாண்டில், திமுக 218 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக அக்கட்சியின் வரவு செலவுத் தணிக்கை அறிக்கை தெரிவித்துள்ளதாக தேர்தல் ஆணைய இணையத்தளம் மூலம் தெரியவந்துள்ளது. ஆளும் கட்சியான திமுகவுக்கு அந்த நிதியாண்டில் 149.95 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு 34.76 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ள நிலையில், 42.36 கோடி ரூபாய் செலவு கணக்கில் காட்டப்பட்டுள்ளது.

வேதாரண்ய மீனவர்களைத் தாக்கி வலைகளைப் பறித்த கொள்ளையர்

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா புஷ்பவனம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள், 50 பைபர் படகுகளில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றபோது பல படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர் அவர்களில் சிலரைத் தாக்கி, கத்தியைக் காட்டி மிரட்டி 550 கிலோ மீன்பிடி வலை, இரண்டு கைபேசிகள் ஆகியவற்றைப் பறித்து சென்றதாக வேதாரண்யம் கடலோர காவல் படையினரிடம் மீனவர்கள் புகார் செய்தனர்.

அதிகாரிகள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவித்தன.

போட்டிகள் ரத்து: வெளி மாநிலம் செல்லும் சேவல்கள்

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பதால் சேவல் ேமாதலுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் சேவல்கள் கரூரில் இருந்து சென்னை வழியாக ஆந்திரா வுக்கும் இதர மாநிலங்களுக்கும் ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருவதாக கரூர் சேவல் வளர்ப்பவரான திரு மணி கூறினார். இதுவரை 50க்கும் மேற்பட்ட சேவல்கள் பல மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். படம்: தமிழக ஊடகம்