சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது

1 mins read
91c44482-54f2-4e55-919f-12fe92eefc9a
படம்: இணையம் -

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை மற்றும் ஓமிக்ரான் பரவல் அச்சம் காரணமாக சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்குப் பயணிகளின் வருகை குறைந்துள்ளது.

இதன் எதிரொலியாக, விமானச் சேவைகளும் குறைக்கப்பட்டுள்ளதால் சென்னை உள்நாட்டு விமான நிலையம் வெறிச்சோடியதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சென்னையில் இருந்து டெல்லி, மும்பை, மதுரை, தூத்துக்குடி, கோவை, ஹைதராபாத், கோல்கத்தா உள்ளிட்ட நகர்களுக்கு சனிக்கிழமை (ஜனவரி 15) 90 விமானங்கள் இயக்கப்பட்டன. அவற்றில் 6,408 பேர் பயணம் செய்தனர்.

அதேபோல, பிற நகர்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட 93 விமானங்களில் 5,988 பேர் பயணம் செய்தனர். ஒட்டுமொத்தம் 183 விமானங்களில் 12,396 பேர் மட்டுமே பயணம் செய்ததாக மாலை மலர் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஒப்புநோக்க, கொரோனா முதலிரு தொற்று அலைகளுக்குப் பிறகு சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்திற்கு கடந்த ஒரு மாதகாலமாக நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 270 விமானங்கள் வந்து சென்றன. அவற்றில் ஏறக்குறைய 30,000 பேர் பயணம் செய்து வந்தனர்.